தனது கணவரின் மரணம் குறித்து தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று நடிகை மீனா கேட்டுக்கொண்டுள்ளார்.
90-களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த மீனா முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது தமிழில் போதிய அளவு வாய்ப்பில்லை என்றாலும் மலையாளம் தெலுங்கில் மீனா பல படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 2 மலையாளம் மற்றும் த்ரிஷ்யம் 2 தெலுங்கு ஆகிய 2 படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஒரு சில படங்களில் முக்கிய கேரக்டரில் மீனா நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த வித்தியாசாகர் என்பரை திருமணம் செய்துகொண்ட மீனாவுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், சென்னை கோட்டூர்புரம் பகுதியில் மீனா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் வித்தியாசகர் திடீரென மரணமடைந்தது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததாகவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து மீனாவின் கணவர் வித்தியாசகர் உடலுக்கு திரைத்துரையினர் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், மீனாவுக்கு ஆறுதல் கூறினர். இதனிடையே மீனாவின் கணவர் மரணம் குறித்து சமூகவலைதளங்களில் மற்றும் யூடியூப் வீடியோக்களில் பல சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், தனது கணவரின் மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று மீனா கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
— Meena Sagar (@Actressmeena16) July 1, 2022
என் அன்பு கணவர் வித்தியாசகரின் மரணம் என்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அனைத்து ஊடகங்களும் எங்களது தனிப்பட்ட உணர்ச்சிக்கு மதிப்பு அளித்து இந்த சூழலில் எங்களின் நிலையை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். தயவு செய்து எனது கணவரின் மரணம் குறித்து தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்.
இந்த இக்கட்டாக காலகட்டங்களில் எங்களுக்கு உதவிய அனைத்து மருத்துவ குழுவிற்கும், முதல்வர் சுகாதாரத்துறை அமைச்சர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், சக ஊழியர்கள் நண்பர்கள் ஊடகங்கள், மற்றும் எங்களுக்காக பிரார்த்தனை செய்துகொண்டு அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“