அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இடையேயான மோதல் வெடித்துள்ள நிலையில், வருகின்ற பொதுக்குழுவில் ஓ.பி.எஸ். வசமுள்ள பொருளாளர் பதவியை பிடிக்க கடுமையான போட்டி நிலவுகிறது.
ஓ.பி.எஸ்.ஸிடம் ஒரு சில நிர்வாகிகளே இருக்கின்றனர். அதே போல், ஓ.பி.எஸ். ஆதரவாக இருக்கும் ஒரு சில மாவட்ட செயலாளர்களின் பதவியும் பறிபோவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக திருச்சி மாநகர மாவட்டச் செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர். இவர் இடத்திற்கு ஆவின் கார்த்திகேயனை நியமிக்க விருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இது குறித்து மாலைக்கோட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகளிடம் பேசியபோது,
‘‘கடந்த மாநகராட்சி தேர்தலின் போது திருச்சியில் அதிமுக வெற்றியே பெறாது என்றனர். அந்தளவிற்கு அமைச்சர்கள் கே.என்.நேருவும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் தீவிர களப்பணியாற்றினார். ஆனால், அதையெல்லாம் மீறி, தி.மு.க.வினருக்கு கடும் போட்டியை கொடுத்து, மலைக்கோட்டை பகுதியில் தனது தம்பியை கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற வைத்தார் ஆவின் கார்த்திகேயன்.
இந்நிலையில் தற்போது, ஓ.பி.எஸ். & இ.பி.எஸ். இடையே மோதல் வெடித்து, அ.தி.மு.க.வின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி வாகைசூட இருக்கிறது. இவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர் திருச்சி மாவட்ட ஆவின் சேர்மன் கார்த்திகேயன். அ.தி.மு.க. ஆட்சியின் போது, அமைச்சர்கள் எல்லாம் ஆவின் கார்த்திகேயன் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டை வைத்தபோது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரடியாக தலையிட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தற்போது, திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். இவர் ஓ.பி.எஸ். பக்கம் இருப்பதால், மாநகர் பதவியிலிருந்து அவரை நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு ஆவின் கார்த்திகேயனை நியமிக்க எடப்பாடியார் தரப்பு முடிவு செய்திருக்கிறது என மாநகர் அதிமுக வட்டாரத்தில் கூறுகின்றனர்.. இதனை உறுதிப்படுத்தும் விதமாகத்தான், சமீபத்தில் புதிதாக அ.தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்து, தினந்தோறும் தொண்டர்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார் ஆவின் கார்த்திகேயன்.
இன்றும் அவர் ஏற்பாட்டில் திருச்சி மாநகர் மாவட்ட கழக அவைத்தலைவர் மலைக்கோட்டை அய்யப்பன் தலைமையில், பாலக்கரை பகுதி கழக செயலாளர் வெல்லமண்டி சண்முகம் முன்னிலையில் திருச்சி மாநகர் மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட அப்பகுதி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.ரத்தினவேல், சிறப்புரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட சில தீர்மானங்கள் நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயம் எனச் சொல்லப்பட்டது. அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவை, எடப்பாடியார் பொதுச்செயலாளராகி கழகத்தை வழி நடத்த வேண்டும். வருகிற 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடியாரை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுப்போம் என்று ஒருமனதாக இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
கழகத்தை காட்டிக்கொடுப்பவர்களுக்கு ஸ்டாலின் அரசு துணை போகிறது. மிரட்டிப் பணிய வைக்கும் தி.மு.க அரசை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. என இரண்டு தீர்மானங்கள் அதிமுக மாநகர நிர்வாகிகள் கூட்டத்தில் ஆவின் கார்த்திகேயனால் நிறைவேற்றப்பட்டது.
இதன் அடிப்படையில் வருகிற பொதுக்குழு கூட்டம் முடிந்த பிறகு, மாநகர் மாவட்ட செயலாளர் பதவியை கைப்பற்ற ஆவின் கார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார்’ என்று சொல்லப்படுகிறது. அதேநேரம் திருச்சி அ.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளராக ஆவின் கார்த்திகேயன் வந்துவிடக் கூடாது என்பதில் ஒரு கோஷ்டி உறுதியாக இருக்கிறது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“