வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பதி,–திருமலை ஏழுமலையான் கோவிலில் செப்., 27 – அக்., 5 வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடக்க உள்ளது.திருமலையில் ஆண்டுதோறும் ஏழுமலையானுக்கு வருடாந்திர பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, செப்.27ம் தேதி முதல் அக்.5ம் தேதி வரை தொடர்ந்து, 9 நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடக்க உள்ளது.
தீர்த்தவாரி
இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடான ஆலோசனைக் கூட்டம் திருமலையில் நேற்று நடந்தது. பின் செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறியதாவது. இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 27ல் மாலை 5.45 மணி முதல், 6.15 மணிக்குள் மீன லக்னத்தில் கொடியேற்றம் நடக்க உள்ளது. அக்டோபர் 1ம் தேதி கருட வாகன சேவை, 2ம் தேதி தங்கத்தேர், 4ம் தேதி திருத்தேர் உற்சவம், 5ம் தேதி தீர்த்தவாரி ஆகியவை நடக்க உள்ளன.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் அமலில் இருந்ததால், பிரம்மோற்சவத்தின் போது வாகன சேவைகள் கோவிலுக்குள் பக்தர்களின்றி நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை மாட வீதிகளில் வாகன சேவைகளின் அணிவகுப்பு நடக்கவுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பக்தர்கள் முன்னிலையில் பிரம்மோற்சவம் நடக்க உள்ளதால், அவர்கள் அதிக அளவில் வர வாய்ப்பு உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கலாசார நிகழ்ச்சி
பிரம்மோற்சவ நாட்களில், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கருட சேவைக்கு முன்தினம் மற்றும் மறுதினம் ‘ஆன்லைனில்’ அறைகள் ஒதுக்கப்படாது. பிரம்மோற்சவத்தின் மற்ற நாட்களில், 50 சதவீதம் அறைகள் ஆன்லைன் முன்பதிவின் கீழும், மீதமுள்ளவை நேரடி முன்பதிவின் கீழும் பக்தர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது.தேவஸ்தானத்தின் இந்து தர்ம பிரசார பரிஷத்தின் கீழ் வாகன சேவைகள் நடக்கும் போது மாடவீதிகளில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement