திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நீர் நிலைகள் மற்றும் அரசு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 874.25.70 ஹெக்டேர் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 1,424.77.30 ஹெக்டேர் நிலம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்பு துறை, இந்து சமய அறநிலையத் துறை,
காவல்துறை ஆகிய துறைகளை மாவட்ட நிர்வாகம் மூலமாக ஒருங்கிணைத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.
2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 122.54.50 ஹெக்டேர், 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 268.65.70 ஹெக்டேர், ஏப்ரல் மாதம் 200.57.70 ஹெக்டேர், மே மாதம் 151.46.30 ஹெக்டேர், ஜூன் மாதம் 131.01.50 ஹெக்டேர் என மொத்தம் 874.25.70 ஹெக்டேர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதில் நீண்ட காலமாக ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலங்களும் மீட்கப்பட்டன.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னர் தூர் வாருதல், கரைகளை பலப்படுத்துதல், நீர் தேங்க நடவடிக்கை எடுத்தல், காவல்துறை மூலமாக நடவடிக்கை என மீண்டும் புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க கண்காணிக்கப்படுகிறது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் அரசு துறைகள் இணைந்து ஒருங்கிணைந்த பண்ணை பூங்காக்கள் அமைக்கப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். நீர்நிலைகள், அரசுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்திருந்தால், தாங்களாகவே முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இல்லையென்றால், சென்னை உயர்நீதி மற்ற ஆணைப்படி ஆக்கரமிப்புகள் அனைத்தும் விரைவில் அகற்றப்படும்” என்று ஆட்சியர் முருகேஷ் கூறியுள்ளார்.