அ.தி.மு.க மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் எம்.ஜி.ஆர் காலத்திலேயே எம்,பி-யாகவும், எம்.எல்.ஏ-வாகவும் இருந்தவர். தேனி மாவட்ட அ.தி.மு.க-வில் சீனியரான ஜக்கையன் கூவத்தூர் நிகழ்வுக்குப் பிறகு எடப்பாடி ஆதரவாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை முழக்கம் எழுந்தவுடன் தேனி மாவட்ட நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்தார். இதில் அதிர்த்தியடைந்த தேனி மாவட்டச் செயலாளர் உடனடியாக ஓ.பி.எஸ் பண்ணைவீட்டில் கூட்டம் நடத்தி தேனி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்தான் எனக் கூறினார்.
இதையடுத்து ஜூன் 23-ல் பொதுக்குழு கூடி கலைந்து மீண்டும் ஜூலை 11-ல் கூட உள்ள நிலையில், அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, தேனியைச் சேர்ந்த அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் அ.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கம்பம் புதுப்பட்டியில் நடைபெற்றது.
பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.டி.கே.ஜக்கையன், “அ.தி.மு.க-வில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் எனக் கேட்டுள்ளனர். ஆளும் கட்சி செய்த தவறுகளை சுட்டிக் காட்டுவது, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் போனால் அதற்காக போராட்டக் களத்தில் குதிப்பது, ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்து அப்பாவி மக்களை அச்சுறுத்தும் போது அதை தட்டிக் கேட்பதில் அ.தி.மு.க என்றுமே முன்னிலையில் உள்ளது.
அந்த வகையில் மிகவேகமாக துரிதமாக சட்டமன்றத்திலும் சரி, பொதுவெளியிலும் சரி முதல் ஆளாக ஆளுங்கட்சி செய்கிற தவறுகளைவும், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதையும் சுட்டிக்காட்டி தட்டிக்கேட்கக் கூடியவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
தேனி மாவட்ட அ.தி.மு.க-வினர் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் உள்ள நூறு சதவிகித அ.தி.மு.க-வினரின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. இதில் எவ்வித குழப்பமும் இல்லை. எவ்வித சட்டச்சிக்கலும் இல்லை. வரும் 11-ம் தேதி பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும். அந்தப் பொதுக்குழுவில் அ.தி.மு.க-வின் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார். எடப்பாடி பழனிசாமி விரைவில் தலைமைப்பொறுப்பை ஏற்பார்” என்றார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சோலைராஜ், முன்னாள் கம்பம் ஒன்றியச் செயலாளர் இளையநம்பி, மற்றும் கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட 150 நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனியில் அனைத்து தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர் எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.