கொல்கத்தா: நாட்டின் நிலைமை தனக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், ஹிந்து, இஸ்லாமியர் என மத ரீதியிலான பேதம் இல்லாமல் அனைவரிடத்திலும் ஒற்றுமை வேண்டும் எனவும் தனது கருத்து தெரிவித்துள்ளார் நோபல் பரிசு பெற்ற இந்தியர் அமர்த்தியா சென்.
இந்திய நாட்டில் கடந்த சில வாரங்களாக சில தனி நபர்களின் கருத்தினால் இரு வேறு மதங்களை சார்ந்த மக்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற படுகொலை அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்நிலையில், நாட்டில் நிலவும் மத மோதல்களை அடிப்படையாக வைத்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் அமர்த்தியா சென்.
கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள அமர்த்தியா சென் ஆய்வு மைய தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய போது இதனை அவர் தெரிவித்துள்ளார். “யாரேனும் என்னிடம் நீங்கள் பயப்படுகிறீர்களா என இப்போது கேட்டால், அதற்கு துளி கூட யோசிக்காமல் ஆமாம் என சொல்வேன். நான் அச்சம் கொள்வதற்கு காரணம் உள்ளது. நாட்டின் தற்போதைய நிலை தான் நான் அச்சம் கொண்டுள்ளதற்கு காரணம்.
நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். எனக்கு அது போதும். வரலாற்று ரீதியாக ஒன்றுபட்ட நம் நாட்டில் பிளவு ஏற்படுவதை நான் விரும்பவில்லை. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். வேதங்கள் பற்றிய பொருள் மற்றும் கருத்து விளக்கம் அடங்கிய ஹிந்து உபநிஷத்துக்களை உலகிற்கு தெரிய செய்தவர் ஒரு இஸ்லாமிய இளவரசர் தான். முகலாய மன்னர் ஷாஜகானின் மகன் தாரா சீகோ, சமஸ்கிருதம் கற்று உபநிஷத்துக்களை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார்.
இந்தியா ஹிந்துக்களின் நாடாக மட்டும் இருக்க முடியாது. மறுபக்கம் இஸ்லாமியர்களால் மட்டும் இந்தியாவை உருவாக்கிட முடியாது. அனைவரும் இங்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமர்த்திய சென், “ஹிந்துக்களும் இஸ்லாமியர்களும் இணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் தேவை. இந்தியாவில் சகிப்புத்தன்மை கொண்ட ஒரு உள்ளார்ந்த கலாச்சாரம் உள்ளது. இந்தியாவில் பல யுகங்களாக யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சிகள் ஒருங்கிணைந்து வாழ்கின்றனர். இந்த பிணைப்பை இந்தியாவின் சகிப்புத்தன்மை கலாச்சாரத்திற்கு உதாரணமாக சொல்ல முடியும்” என்றும் தெரிவித்தார்.
பிரிவினைகளைச் சமாளிப்பதில் நீதித்துறையின் பங்கு குறைவு:
“நாட்டை துண்டு துண்டாக்கும் இத்தகைய பிரிவினை ஆபத்துகளை இந்திய நீதித்துறை கண்டும் காணாதது போல் இருப்பது பயத்தை அதிகரிக்கிறது. பாதுகாப்பான எதிர்காலத்திற்கு, இந்தியாவில் நீதித்துறை, மக்கள் சபைகள் (நாடாளுமன்றம், சட்டமன்றங்கள்) சமநிலையில் இருக்க வேண்டும்.” என்றும் அமர்த்தியா சென் வேதனை தெரிவித்துள்ளார்.