வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நுபுர் சர்மா தனது செயல்பாட்டிற்காக டி.வி.,யில் தோன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்தை கூறியிருந்தார். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், சில இஸ்லாமிய நாடுகளும் தங்கள் தரப்பு கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து நுபுர் சர்மா மீது பா.ஜ., மேலிடம் கட்சி நடவடிக்கை எடுத்தது. நுபுர் சர்மாவிற்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. தனக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளின் விசாரணையை டில்லிக்கு மாற்ற வேண்டும் என நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இதனை இன்று (ஜூலை 1) விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, நுபுர் சர்மாவின் மனுவை நிராகரித்தது. மேலும், எந்தவொரு பரிகாரத்தையும் தேட உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என வலியுறுத்தியது.
மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‛நுபுர் சர்மாவும் அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது. நுபுர் சர்மாவுக்கு எதிராக பதிவான புகார்களின் மீது டில்லி போலீஸ் என்ன செய்கிறது? அவர் நடந்து கொண்ட விதம் , அதன் பிறகு அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்ககேடானது.
ஒரு கட்சியின் செய்தித்தொடர்பாளர் என்றால், நீங்கள் இதுபோல் எது வேண்டுமானாலும் சொல்வதற்கு லைசன்ஸ் இல்லை. உதய்பூரில் நடைபெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்திற்கு அவரது செயல்பாடுகளே காரணம். நுபுர் சர்மா தனது செயல்பாட்டிற்காக டி.வி.,யில் தோன்றி ஒட்டுமொத்த நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். நாட்டில் தற்போது நடப்பதற்கு இந்த பெண்மணியே பொறுப்பு. ஆனால் நிவாரணம் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார். அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறதா அல்லது அவர் ஒட்டுமொத்த நாட்டிற்கும் அச்சுறுத்தல் கொடுத்திருக்கிறாரா?’ என காட்டமாக தெரிவித்தனர்.
Advertisement