கடந்த மாதம் பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா, தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்தது சர்வதேச அளவில் இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில். கடந்த செவ்வாயன்று ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாக டெய்லர் ஒருவர் வீடியோ வெளியிட்டதாக, அவரை இரண்டு பேர் தலை துண்டித்துக் கொலைசெய்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்தச் சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று காலை, “ஜனநாயகம் அனைவருக்குமே பேச்சுரிமை வழங்கியுள்ளது. ஆனால், அதற்காக ஜனநாயகத்தின் வரம்பை மீற அனுமதிக்க முடியாது. ஒரு தேசிய ஊடகத்தில் பேசக்கூடிய நபர் இப்படிப் பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதும், அதன்மூலம் ஏற்பட்ட விளைவும், ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது. உதய்பூரில் நடந்த படுகொலைக்கு இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களே காரணம். இதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் நுபுர் ஷர்மா மன்னிப்பு கேட்க வேண்டும்” என நுபுர் ஷர்மாவுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அழிவை ஏற்படுத்தும் வகையில் இருக்கும், பிளவுபடுத்தும் சித்தாந்தங்களை எதிர்த்துப் போராடுவதற்கான காங்கிரஸின் தீர்மானத்தை நீதிமன்றம் பலப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உணர்ச்சிகளைத் தூண்டியதற்கு பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஒருவரே பொறுப்பு என்றும், அதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மிகச் சரியாகத் தெளிவுபடுத்தியுள்ளது நீதிமன்றம். நாடு முழுவதும் எதிரொலிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த கருத்து, அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க -வை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.
உச்ச நீதிமன்றம் இந்த அரசாங்கத்திற்கு ஒரு கண்ணாடியைப் பிடித்து, அதன் செயல்களின் அடித்தள அசிங்கத்தைக் காண்பித்துள்ளது. வகுப்பு உணர்வுகளைத் தூண்டி ஆதாயம் தேட பா.ஜ.க முயல்கிறது என்பது இரகசியமல்ல. இன்று, இந்த அழிவுகரமான பிளவுபடுத்தும் சித்தாந்தங்களை எதிர்த்துப் போராடும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள உறுதியை உச்ச நீதிமன்றம் வலுப்படுத்தியுள்ளது. அரசியல் ஆதாயங்களுக்காகத் தேசத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தும் அனைத்து வகையான தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தை இந்தியத் தேசிய காங்கிரஸ் ஒருபோதும் நிறுத்தாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.