குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார். இவருக்கு தமிழகத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் யஷ்வந்த் சின்கா நேற்று சென்னை வந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிகள் இடம் ஆதரவு திரட்டினார்.
இந்நிலையில், பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக நாளை சென்னை வருகிறார். சென்னையில் 3 மணி நேரம் அவர் தங்குகிறார். தனியார் ஓட்டல் ஒன்றில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்பிகள், எம்எல்ஏக்களை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டுகிறார்.