கதைக்கு ஏற்ற கச்சிதமான ஒளிப்பதிவினால் கவனம் பெற்றவர் ஒளிப்பதிவாளர் சுகுமார். மைனா, கும்கி, தர்மதுரை என அழுத்தமான கதையம்சம் கொண்ட படங்களுக்கு காட்சி அழகூட்டியவர். இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தந்தை மகள் உறவை மையப்படுத்திய ஒரு ஆல்பம் சாங் படப்பிடிப்புக்காகத் தேனி வந்திருந்தார். அந்திசாயும் வேளையில் பருத்திக்காட்டுக்குள் தந்தை தன் மகளை உப்புமூட்டை சுமந்து செல்வது போன்ற சில்-அவுட் ஷாட் எடுத்து முடித்துவிட்டு வந்தார்.
வாங்க பேசலாம் என உற்சாகத்துடன் அழைத்த அவரிடம் கேள்விகளை முன்வைத்தோம்…
சிறுவயதில் இருந்தே சினிமா ஆர்வம் இருந்ததா?
”மதுரை மாவட்டம் செக்கானூரணி எனக்குச் சொந்த ஊர். சிறுவயதில் அங்குள்ள வடிவேல் தியேட்டரில் வெளியாகும் படங்களை டிக்கெட் எடுத்து இரண்டு முறையும், டிக்கெட் எடுக்காமல் கள்ளத்தனமாக இரண்டு முறையும் பார்ப்பேன். அந்த அளவுக்கு சிறுவயதில் இருந்தே சினிமா மீது ஆர்வம் இருந்தது.”
திரைப்படத்துறையில் உங்களுக்கான முதல் வாய்ப்பு?
”ஏ.வி.எம் கம்பெனியில் 50ஆவது ஆண்டு தொடக்கத்தின் முதல் படமான `மின்சார கனவு’ படத்தில் என் அண்ணன் ஜீவன் மூலம் உதவி ஸ்டில் போட்டோகிராபராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போதிருந்து படிப்படியாக சினிமாவைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.”
ஸ்டில் போட்டோகிராபி டு சினிமோட்டோகிராபி பயணம் பற்றி?
”கேமராமேனுக்கு அடித்தளமே ஸ்டில் போட்டோகிராபி மற்றும் பிரின்டிங் லேபில் வேலை பார்ப்பதுதான். மின்சார கனவு படத்தை முடித்துவிட்டு பிரின்டிங் லேபில் பம்பாய், ஆசை போன்ற படங்களுக்கு வேலை செய்தேன். அப்போது ஒளிப்பதிவாளர்கள் ராஜீீவ் மேனன், சந்தோஷ் சிவன் ஆகியோர் எப்படி லைட்டிங் வைக்கிறார்கள், அவர்களின் படங்கள் எவ்வாறு எடுக்கப்பட்டன என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அப்போது கற்றுக்கொண்ட விஷயங்கள்தான் தற்போதுவரை எனக்கு உதவியாகவும் எளிதாகவும் இருக்கின்றன.”
இயக்குநர் பிரபு சாலமனின் படங்களுக்குத் தொடர்ச்சியாக ஒளிப்பதிவு செய்யறீங்க?
”நடிகர் விக்ரம் நடித்த `கிங்’ படத்தில் நான் ஸ்டில் போட்டோகிராபராகப் பணியாற்றினேன். நான் படத்தில் இடம்பெறும் காட்சிகளை மட்டும் படமாக்காமல் போஸ்டர்களுக்கு பிரமோஷன்களுக்குப் பயன்படுத்தும் விதமான போட்டோக்களை எடுப்பது வழக்கம். குறிப்பாக அவைலபில் லைட்டில் படம் எடுப்பேன். அதைப் பார்த்த அந்தப் படத்தின் இயக்குநர் பிரபு சாலமன் தனது அடுத்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்யுமாறு கேட்டார். அதை நான் மறுத்தேன். பிறகு என் அண்ணன் ஜீவன் `கொக்கி’ என்ற அந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். அந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் நான் ஒளிப்பதிவு செய்தேன். இதையடுத்துதான் லாடம், மைனா, கும்கி, கும்கி 2 என அவருடன் இணைந்து பணியாற்றிவருகிறேன்.”
எத்தனையோ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவிட்டபோதிலும் `மைனா’ சுகுமார் என்றே அழைக்கப்படுவது ஏன்?
”எல்லா படங்களுக்கும் ஒரே மாதிரி வேலை பார்க்கிறோம். படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வதையும் ஏற்றுக் கொள்ளாததையும் சூழல்தான் தீர்மானிக்கிறது என நினைக்கிறேன். சிவகார்த்திகேயன், விக்ரம், விஜய், விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகியோரின் படங்கள் என தற்போது 35 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவிட்டபோதிலும் மைனா, கும்கி மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. அது எனக்கு சந்தோஷம்தான்.”
அருவி, மலை, காடு என இயற்கையைக் காட்சிப்படுத்துவதில் தான் ஆர்வம் அதிகமா?
”மைனா படத்தைத் தொடர்ந்து கும்கியும் மலைப்பகுதியில் ஒளிப்பதிவு செய்தேன். அந்தப் படங்களுக்காக தேனி, கேரளா எனப் பல்வேறு மலைப்பிரதேசங்களில் லொகேஷன் பார்த்தோம். அப்போது மலை, காடுகளைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அதுதான் இயற்கையை எளிதாகக் காட்சிபடுத்த உதவுகிறது. சில விஷயங்களைக் காட்சிப்படுத்தும்போது சலிப்பு தட்டிவிடும் ஆனால், அருவி மலை காடுகளைப் படமாக்கும்போது சலிப்பே ஏற்படாது; இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். அதுவே மக்களுக்கும் பிடித்த விஷயமாக இருக்கிறது.”
இயக்குநர் பாலாவுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?
”அவருடைய `நந்தா’ படத்திற்கு நான்தான் ஸ்டில் போட்டோகிராபராகப் பணியாற்றினேன். பிறகு `வர்மா’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வாய்ப்பு கிடைத்தது. எனக்கும் அவருக்குமான உறவு அண்ணன் தம்பி உறவைப் போன்றது. ஆனாலும் படப்பிடிப்பின்போது ஒளிப்பதிவாளருக்கான மரியாதையைக் கொடுப்பார். அவருடைய படங்களிலேயே மிகக்குறைந்த நாள்களில் எடுக்கப்பட்ட படம் அது. ஏற்கெனவே அவர் படத்தில் வேலை பார்த்த அனுபவமும் அவருடன் வேலை பார்க்க எளிமையாக இருந்தது. வெளியே அவரைப் பற்றிய பார்வை வேறு மாதிரியாக உள்ளது. ஆனால், அவர் அப்படிக் கடுமையானவரில்லை. அவருடைய அடுத்த படத்தில் சேர்ந்து வேலை செய்யலாம் எனச் சொல்லியுள்ளார்.”
நீங்கள் ஒளிப்பதிவு செய்த தேன் திரைப்படம் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வாங்கும் என நினைத்தீர்களா?
”மைனா, கும்கி, தொப்பி போன்ற படங்களுக்கு மலைப்பிரதேசங்களில் படப்பிடிப்பு நடத்திய அனுபவம் உள்ளது. இருப்பினும் மலையில் எடுக்கப்பட்ட தேன் படத்துக்கு என் நண்பரும் இயக்குநருமான கணேஷ் விநாயகன் முதலில் என்னைத் தேர்வு செய்யவில்லை. அந்தக் கதையைக் கேட்டு மிகவும் பிடித்துப்போனதால் நானே செய்வதாகக் கூறினேன். அந்த அளவுக்கான பட்ஜெட் இல்லையென்றார். சம்பளமே வேண்டாம் எனக் கூறியே அந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன். கதையும், லொகேஸனும் எனக்குப் பிடித்திருந்தால் இன்ட்ரஸ்டிங்காக வேலை பார்க்க முடிந்தது. மலைப்பகுதியில் படம் பிடிப்பது எனக்கு ஈஸியானது. பிடித்து வேலை செய்தோம் விருது கிடைக்கும் என்று பார்க்கவில்லை. அது மக்கள் பார்த்து, அரசு பார்த்துக் கொடுக்கும்.”
திரைப்படம் இயக்கும் ஆசை உள்ளதா?
”தற்போது வரை இல்லை. இனிமேல் வந்தால் இயக்குவேன்.”