வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹைதராபாத்-தெலுங்கானாவில் இன்று துவங்கும் பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணி, அம்மாநிலத்தின் பிரபல பெண் சமையல் கலைஞரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம், தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் இன்று துவங்கி நாளை நிறைவடைகிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் பா.ஜ., ஆளும் 18 மாநிலங்களின் முதல்-வர்கள் பங்கேற்கின்றனர்.இக்கூட்டத்தில் மொத்தம் 500 பேர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் தெலுங்கானா பா.ஜ., தலைவர் பண்டி சஞ்சய், கூட்டத்தில் பங்கேற்போருக்கு, மாநிலத்தின் சிறப்பு உணவு வகைகளை வழங்க முடிவு செய்துள்ளார்.இதற்கான பணியை அவர் தெலுங்கானாவின் பிரபல பெண் சமையல் கலைஞர் யாதம்மாவிடம் ஒப்படைத்துள்ளார்.
இது பற்றி யாதம்மா கூறியதாவது:- சிறு வயதில் கூலித் தொழிலாளி ஒருவருக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர். மணமான மூன்றாவது ஆண்டில் கணவர் இறந்து விட்டார். மாமியார் கொடுமை தாங்காமல் கைக்குழந்தையுடன் கரீம் நகருக்குவந்தேன்.இங்கு, வெங்கண்ணா என்ற சமையல் கலைஞரிடம் வேலைக்குச் சேர்ந்து, நூற்றுக்கணக்கானோருக்கு சமையல் செய்வதை கற்றுக் கொண்டேன்.நாளடைவில் நானே ‘ஆர்டர்’ எடுத்து நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்தேன். அரசியல் மாநாடு, கட்சி கூட்டங்களுக்கு உணவு தயாரித்து கொடுக்கிறேன்.இந்நிலையில், ஹைதராபாத் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு தெலுங்கானாவின் சிறப்பு உணவுகளை சமைத்துக் கொடுத்து அசத்த உள்ளேன். இந்தப் பெருமையை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement