புதுடெல்லி: பிஎஸ்எல்வி சி53 ராக்கெட்டின் மூலமாக நேற்று முன்தினம் ஏவப்பட்ட 3 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி, இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் விண்வெளி துறையிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல ஆர்வமுடன் தொடங்கப்பட்டுள்ளன. இதில், ஐதராபாத்தைச் சேர்ந்த, ‘துருவா ஸ்பேஸ்’ மற்றும் ‘திகந்தாரா நிறுவனங்கள்’ குறிப்பிடத்தக்கவை. இந்நிலையில், இஸ்ரோ சார்பில் நேற்று முன்தினம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட 3 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை, துருவா ஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த கருவிகள் சுமந்து சென்று, அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தின. இதன்மூலம், விண்வெளி திட்டத்தில் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், அடுத்ததாக துருவா ஸ்பேசின் தைபோல்ட்-1 மற்றும் தைபோல்ட்-2 செயற்கைக்கோள் ஏவும் கருவிகளை பிஎஸ்எல்வி சி54 செயற்கைக்கோளில் ஏவுவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகி உள்ளன.இது குறித்து, துருவா ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் நெக்கண்டி கூறுகையில், ‘‘இந்த வெற்றி எங்களுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். விரைவில் உள்நாட்டில் உருவாக்கப்படும் செயற்கைகோள்களை விண்ணில் ஏவவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார். எனவே, அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் போல, இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் செயற்கைகோள்களை தனிப்பட்ட முறையில் விண்ணுக்கு அனுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை.பிரதமர் மோடி நம்பிக்கைபிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 2 சுற்றுப்பாதை நிலை நிறுத்தும் கருவிகள் சோதனை செய்யப்பட்டது புதிய மைல்கல்லாகும். இது எதிர்காலத்தில் இன்னும் அதிக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விண்வெளி துறையில் உருவாகும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது,’ என்றார்.