பிளாக்செயின் தொழில்நுட்பத்தை எளிமையாக புரிந்துகொள்வது எப்படி?

பிளாக்செயின், பிட்காயின் குறியீட்டு நாணயம் (Cryptocurrency) என்பதைப் பற்றி பலரும் பேசிக்கொண்டிருப்பதைக் காணலாம். பிளாக்செயின் தொழில்நுட்பம் எவ்வாறு உருவானது என்பதற்கு ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட இரண்டு அணிகள்தான் ஜெயிக்கும் என்று இரண்டு நண்பர்கள் தங்களுக்குள் பந்தயம் வைத்துக்கொள்கின்றனர் என்று வைத்துக்கொள்வோம். ஒருவர் சொன்ன அணி வென்றுவிட்டது, மற்றொருவர் சொன்ன அணி தோற்றுவிட்டது. இந்த நிலையில் பந்தயத்தில் வென்றவர் பந்தயத் தொகையைக் கேட்கும்போது முடியாது என்று தோற்றவர் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்.

இந்த நிலையை மாற்றுவதற்காக இடைத்தரகர் ஒருவரை நியமித்து அவரிடம் இருவரும் பந்தயத் தொகையைக் கட்டி அதற்கேற்றாற்போல் பந்தயம் வைத்துக்கொள்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இதுபோன்ற சூழலில் இடைத்தரகர்கள் பணத்தை ஏமாற்றிவிடுகிறார்கள், என்னிடம் தொகையைக் கொடுக்கவில்லை என்று ஏமாற்றிவிடுகின்றனர்.

இதனை மாற்ற இடைத்தரகரிடம் கொடுத்த தொகையை நான்கு அல்லது ஐந்து இடங்களில் பதிவுசெய்து வைத்திருந்தால் இடைத்தரகரால் ஏமாற்ற முடியாது. இது போன்ற செயல்பாடுதான் பிளாக்செயின் தொழில்நுட்பம். மையப்படுத்தப்படாத வழங்ககத்தின் (Decentralized Server) மூலம் ஒரு இடத்தில் உள்ள தரவானது வெவ்வேறு இடங்களில் பதிவுசெய்யப்பட்டு ஒரு நிகழ்வானது நடைபெறுவதுதான் பிளாக்செயின் தொழில்நுட்பம். இன்னும் எளிமையாக, பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ள இதோ சில உதாரணங்கள்:

ஒரு பணத்தைப் பாதியாகக் கிழித்து, ஒருவரிடம் ஒரு பாதியும், மற்றொருவரிடம் ஒரு பாதியும் இருக்குமாறு வைத்துக்கொள்வோம். இந்தப் பணத்தை பயன்படுத்த வேண்டுமென்றால், ஒருவரிடம் உள்ள பாதியையும், மற்றொருவரிடம் உள்ள பாதியையும் இணைத்த பிறகுதான் பயன்படுத்த முடியும். அதுபோலத்தான் பிளாக்செயின் தொழில்நுட்பமும்.

ஒரு தொகுதிக்கென ஹேஷ் குறியீடு (Hash key) இருக்கும். இன்னொரு தொகுதிக்கென ஒரு ஹேஷ் குறியீடு (hash key) இருக்கும். அந்த இன்னொரு தொகுதியை நாம் பயன்படுத்தும்போது முன்னர் உள்ள தொகுதிக்கான குறியீட்டின் மதிப்பு (Key Value) நமக்குத் தேவை. அப்போதுதான் அதைச் செயல்படுத்த முடியும். இவ்வாறு செய்வதுதான் பிளாக்செயின் தொழில்நுட்பம்.

சங்கிலி இணைப்பு போன்ற இந்த அமைப்பில் தேதி, நேரம் போன்றவையும் குறியாக்க வடிவில் சேமித்து வைக்கப்படும். ஏதாவதொரு தகவலை அழிப்பதோ மாற்றுவதோ இதில் கடினமானது. ஒவ்வொரு தகவல் பரிமாற்றமும் வலையிணைப்புக் கணுக்கள் (network nodes) மூலமாகவும், பராமரிப்பாளர்கள் மூலமாகவும் சரிபார்க்கப்படும்.

எடுத்துக்காட்டாக, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இடத்தை விற்கிறோம் என்றால், ஒருமுறை விற்ற பின், நம்முடைய கணக்கிலிருந்து அந்த இடம் சென்றுவிடும். இதனை வலையிணைப்புக் கணுக்களும் பராமரிப்பாளர்களும் உறுதிசெய்வார்கள்.

இடம் யாருக்குச் சொந்தம், எப்போது பரிமாற்றம் நடந்தது என்பன போன்றவற்றை அதிநவீனக் கணினி மூலமாக, கணிதக் கோட்பாடுகளையும் சமன்பாடுகளையும் எதிர்கொண்டு விடையளிப்பதாக அந்த உறுதி அமையும். இவ்வாறு பரிமாற்றத்தை உறுதிசெய்த பின், மறுமுறை அதே இடத்தை வேறொருவருக்குக் கொடுக்க இயலாது.

அதேபோல்தான் பிளாக்செயின் தொழில்நுட்பமும். தற்போது பிளாக்செயின் தொழில்நுட்பம் பல்வேறு பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. அதிவேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப யுகத்தில் பிளாக்செயின் குறித்து அறிந்துவைத்துக்கொள்வது மிகவும் நல்லது.

> இது, எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி இயக்குநர் பா.சிதம்பரராஜன், உதவிப் பேராசிரியர் க.சண்முகம் ஆகியோர் எழுதிய ‘இந்து தமிழ் திசை’ ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.