மதுரை: பெரியகுளத்தில் 182 ஏக்கர் அரசு நிலம் தனியார் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்ட வழக்கில் துணை வட்டாட்சியரின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.700 கோடி மதிப்புள்ள 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகளின் துணையுடன் தனி நபர்களின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக பெரியகுளம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலர் அன்னபிரகாஷ், பெரியகுளம் கோட்டாட்சியர் ஆனந்தி, ஜெயப்பிரதா, வட்டாட்சியர்கள் கிருஷ்ணகுமார், ரத்னமாலா, துணை வட்டாட்சியர்கள் மோகன்ராம் உள்ளிட்ட பலர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அன்னபிரகாஷ், மோகன்ராம் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
மோகன்ராம் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 பேர் ஜாமீன் பெற்றுள்ளனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தலைமறைவாக இருக்கும் நபரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு அரசு தரப்பில், தலைமறைவாக இருப்பவரின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்தபோது அதில் ஒரு பணப் பரிவர்த்தனையும் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மனுதாரர் மோகன்ராம் தரப்பில் ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, எந்த விசாரணை அமைப்பாக இருந்தாலும் பொதுமக்களுக்கு சிறப்பான சேவை அளிப்பது இல்லை. தலைமறைவு குற்றவாளிகளின் இருப்பிடம் தெரிந்தும் அவர்களை கைது செய்யாமல் இருக்கின்றனர். இந்த வழக்கில் போலீஸாரின் பதில் திருப்தியாக இல்லை என்றார். பின்னர் மோகன்ராமின் ஜாமீன் மனுவை திரும்ப பெற அனுமதி வழங்கி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.