மணிப்பூர் நிலச்சரிவு – ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு; தேடும் பணி தீவிரம்

மணிப்பூர் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரம்காட்டி வருகின்றனர்.
மணிப்பூரின் நோனி மாவட்டத்திலுள்ள துபுல் யார்டு ரயில்வே கட்டுமான முகாமில் கடந்த புதன்கிழமை இரவு அன்று இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலர் நிலச்சரிவில் புதையுண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அசாம் ரைபிள்ஸ் மற்றும் டெரிடோரியல் ராணுவ வீரர்கள், துபுல் ரயில் நிலையத்தின் பொதுப் பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணியைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி. பி.டவுங்கல் கூறுகையில், இடிபாடுகளிலிருந்து இதுவரை மொத்தம் 23 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுவரை எத்தனை பேர் நிலச்சரிவில் புதையுண்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்படவில்லை. ஆனால், கிராம மக்கள், ராணுவம் மற்றும் ரயில்வே பணியாளர்கள், தொழிலாளர்கள் என சுமார் 60 பேர் அதில் சிக்கியுள்ளனர் எனத் தகவல் கூறினார். மேலும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து இதுவரை 13 டெரிடோரியல் ராணுவ வீரர்கள் மற்றும் 5 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
image
இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த மோடி, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிடம் பேசியுள்ளார். மேலும், ’’நிலச்சரிவு குறித்த நிலைமையை மதிப்பாய்வு செய்தேன். மத்திய அரசின் அனைத்து ஆதரவும் கிடைக்கும் என்பதை உறுதி செய்தேன். என் எண்ணங்கள் யாவும் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. பாதிக்கப்பட்ட அனைவரின் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்’’ என ட்வீட் செய்திருந்தார். இதேபோன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மணிப்பூர் மாநில முதல்வரிடம் தொலைபேசி வாயிலாக பேசி மத்திய அரசு மணிப்பூர் மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்கும் எனவும், ஏற்கனவே மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்ற நாளையில் கூடுதலாக இரண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
image
நிலச்சரிவால் பாறைகள் சரிந்து ஆற்றின் குறுக்கே விழுந்ததால் ஏராளமானோர் புதையுண்டு இருக்கலாம் எனவும், அதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிகிறது. மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன் சிங் பலியானவர்கள் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ரூ. 5.லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனக் கூறி உள்ளார். இரண்டு நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் காணாமல் போனவர்கள் இன்னும் சில நாட்களில் மீட்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியிருக்கிறது.
– விக்னேஷ்முத்துSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.