மீனாவின் கணவர் மரணத்தில் சந்தேகமுள்ளதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த மீனா, தொழிலதிபர் வித்யாசாகரை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியின் மகள் நைனிகா தெறி எனும் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில் நுரையீரல் தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து, மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டு, இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது. முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலரும் வித்யாசாகர் மறைவுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், யூடியூபில் சினிமா குறித்த செய்திகளை கூறி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தற்போது மீனாவின் கணவர் குறித்து பேசியுள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூப் வீடியோ ஒன்றில் அவர் பேசுகையில், மீனா திடீரென குடும்பத்துடன் சென்னைக்கு வர காரணம் என்ன? அவரது கணவர் மரணம் அடைந்து வெகுநேரமாகியும், மருத்துவமனை சார்பில் அறிக்கை எதுவும் வெளியாகாதது ஏன்? எனவும், அறிக்கை வெளியானால் தான் வித்யாசாகர் மரணத்தில் மர்மம் இருக்கிறதா இல்லையா என தெரிய வரும் என கூறியுள்ளார்.
அதேபோல் வித்யாசாகருக்கு தன் மனைவி, மகள் நடிப்பது பிடிக்கவில்லை என்றும், அதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் என்றும் பேசியுள்ளார்.
மேலும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு மீனா ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சொத்துக்கள் இருக்கும்போது ஏன் மீனா மீண்டும் நடிக்க வந்தார்? என்றும் அவர் கேட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் பயில்வான் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல் திரையுலகினரை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக கூறி பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.