மும்பை: மராட்டியத்தில் அமைந்துள்ள புதிய அரசுக்கு பாரதிய ஜனதாவை போல தொல்லை கொடுக்க மாட்டோம் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார். பத்ரா சாவல் நில மோசடி வழக்கு தொடர்பாக சஞ்சய் ராவத் இன்று மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். முன்னதாக காலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்த நாள் முதல் பாரதிய ஜனதா தொல்லை கொடுத்து வந்தது. அதேபோல நாங்கள் தற்போது அமைந்துள்ள ஷிண்டே தலைமையிலான புதிய அரசுக்கு ஒருநாளும் தொல்லை கொடுக்க மாட்டோம் என்றார். புதிய அரசு மக்களுக்காக பணியாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் செயலால் சிவசேனா பலவீனமாகவில்லை என்றும் அவர் கூறினார். மராட்டியத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற மறுநாளே மகா விகாஸ் கூட்டணியை அமைத்ததில் முக்கிய தலைவரான சரத் பவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2004 முதல் 2020 வரையிலான தேர்தல்களில் சரத் பவார் தாக்கல் செய்த சொத்து விவரங்களை கணக்கில் கொண்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.