தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற சில தினங்களிலேயே, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆளுநர், முதல்வர் போன்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள் வருகையின்போது, பெண் காவலர்களை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.
பெண் காவலர்கள், சாலைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படும்போது இயற்கை உபாதைகளைக் கழிக்க இடமில்லாமல், உடலளவில் மிகுந்த வேதனைக்கு ஆளாகிறார்கள் என்பதால், முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதில் இருந்து பெண் காவலர்களுக்கு விலக்கு அளித்து, அப்போதைய காவல்துறை டிஜிபி திரிபாதி வாய்மொழியாக உத்தரவிட்டிருந்தார். இந்த அறிவிப்பை பலரும் வரவேற்று ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு நேற்று சென்னை வந்ததையொட்டி பல இடங்களில் பாதுகாப்புப் பணியில் பெண் காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில், பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.
இதுகுறித்துக் கேட்டதற்கு பெண் காவலர் ஒருவர், “முதலமைச்சருக்கு மட்டும்தான் நாங்க நிற்குறதில்லை” எனக் கூறினார். பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் உடல் ரீதியான பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு முதலமைச்சர் அறிவித்தாலும், அந்த உத்தரவு மீறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி வந்தபோதும், பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர். இது தொடர்பான விளக்கம் கேட்பதற்காக டி.ஜி.பி, சென்னை மாநகர கமிஷனர் ஆகியோரைத் தொடர்புகொண்டபோது அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை.
பிரதமர், குடியரசுத்தலைவர் போன்ற அதிமுக்கிய அரசியல் பிரமுகர்களின் வருகையை எதிர்த்து, பெண்கள் சாலை மறியலில் ஈடுபடும் நிலையில், அவர்களைக் கையாள்வதற்காகப் பெண் காவலர்கள் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
பெண் காவலர்களுக்கும் சமமாக சம்பளம் வழங்கப்படும் நிலையில், இது போன்ற பாதுகாப்புப் பணியில் அவர்களுக்கு விலக்கு அளிப்பது, ஆண் காவலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதும் இதற்கொரு காரணம் என்று காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.
முதல்வரால் விதிக்கப்பட்ட உத்தரவை மீறியும் பெண் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவது பெண் காவலர் நலனுக்கு எதிரானது.