இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை “ராக்கெட்ரி”யாக திரைக்கு கொண்டு வந்திருக்கிறார் ஆர்.மாதவன். நாசா வேலையை உதறித் தள்ளியவரை நாட்டுக்கே துரோகம் செய்ததாக பழி சுமத்தப்பட்டவர் தான் இந்த நம்பி நாராயணன். இந்த படத்தின் வேகத்திற்கு ஏற்ப கதையைப் புரிந்து கொள்ள, படத்தை பார்க்கும்முன் இந்த காலக்கட்டங்களை குறித்து அறிந்திருந்தால், படம் இன்னும் சிறப்பாக உங்கள் பார்வைக்கு விரியும். அந்த முக்கியமான 4 கால கட்டங்கள் இதோ!
1.1991-1992
சோவியத் யூனியனாக வல்லரசாக ஆதிக்கம் செலுத்தி வந்த ரஷ்யா சிதறுண்ட காலகட்டம் அது. அதனுடன் இருந்த பல பகுதிகள் தனித்தனியே சிதறி தங்களை சுதந்திர நாடுகளாக அறிவித்துக் கொண்டிருந்த காலம். உக்ரைன், பெலாரஸ் உள்ளிட்ட 15 நாடுகள் அப்போது தான் உதயமாகின. ரஷ்யாவிற்கு பொருளாதாரம், அரசியல் என அனைத்து திசைகளிலும் சரமாரி தாக்குதல் நடைபெற்ற சமயம் அது. அப்போது நம்பி நாராயணன் தலைமையிலான குழுவினர் கிரையோஜெனிக் எரிபொருள் அடிப்படையிலான என்ஜின்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை மாற்றுவதற்கும், அத்தகைய இரண்டு என்ஜின்களை ரூ.235 கோடிக்கு வாங்குவதற்கும் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்தனர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் ரஷ்யாவிற்கு கடிதம் எழுதி, தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு மாற்றுவதற்கு எதிராக ஆட்சேபனைகளை எழுப்பியது இந்த ஏகபோகத்தை புறக்கணிக்க, இந்தியா ரஷ்யாவுடன் நான்கு கிரையோஜெனிக் என்ஜின்களை உருவாக்குவதற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கடும் போராட்டத்திற்கு பிறகு இந்தியாவுக்கு கிரையோஜெனிக் என்ஜின்கள் வந்திறங்கின.
அமெரிக்காவும் பிரான்சும் மிக அதிக விலைக்கு கிரையோஜெனிக் என்ஜின்களை விற்க முன்வந்தன. சோவியத் ரஷ்யாவில் எழுந்த நெருக்கடியை பயன்படுத்திய இந்தியா அங்கிருந்து கிரையோஜெனிக் என்ஜின்களை வாங்கியது. ஆனால் அந்த விலையும் நியாயமான ஒன்றாக இருந்ததால் ரஷ்யா இந்தியாவின் கோரிக்கையை ஏற்றது.
2.1994
கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலகட்டம். கருணாகரன் என்ற மூத்த காந்தியவாதி முதல்வராக இருந்தார். அப்போது தான் நம்பி நாராயணன் மீது தேசத் துரோக பழி விழுந்தது. இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதள ரகசியங்களை 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்காக இரு பாகிஸ்தான் உளவுப் பெண்களிடம் கூறிவிட்டார் என்று புகார் எழுந்தது. நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டு கடும் சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டங்களும் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன. இந்த போராட்டங்கள் அனைத்தும் அப்போது முதல்வராக இருந்த கருணாகரனை குறிவைத்து அவரது காங். கட்சியின் ஒரு பிரிவினரால் நடத்தப்பட்டது. கடும் விமர்சனங்களை அவரது ஆட்சி சந்திக்கவே, 5 ஆண்டுகளை நிறைவு செய்யாமலே 1995இல் பதவியை ராஜினாமா செய்தார் கருணாகரன். இதையடுத்து புதிய முதல்வராக ஏ.கே. ஆண்டனி பதவியேற்றார்.
3.1998
சர்வதேச தொடர்புகள் அதிகம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதால் இந்த வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவிடம் (சிபிஐ) ஒப்படைக்கப்பட்டது. காவல்துறை மற்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகள் வரம்பு மீறி நம்பி நாராயணனிடம் விசாரணை நடத்தியதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஏப்ரல் 1996 இல் மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐயால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் 1998 இல் நம்பி நாராயணன் குற்றவாளி இல்லை; நிரபராதி என அறிவித்தது. ஆனால் இந்த வழக்கு 1998 ஆம் ஆண்டுடன் இந்த வழக்கு நிற்காமல் இன்று வரை தொடர்ந்து வருகிறது. வழக்கை நடத்தி வருபவர் நம்பி நாராயணன். தனக்காக அல்ல, தன் போல வேறு யாருக்கும் இந்த சூழல் வரக்கூடாது என்பதற்காக இன்றும் உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.
4.2019
மனித உரிமை மீறல்களுக்காக 2001 ஆம் ஆண்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நம்பி நாராயணனுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது. கேரள உயர்நீதிமன்றம் அந்த இழப்பீட்டு தொகையை 10 லட்சம் ரூபாயாக குறைத்து உத்தரவிட்டது. பின் அடுத்தடுத்த மேல்முறையீடுகளுக்கு பின்னர் கேரள அரசு ரூ.1.3 கோடி இழப்பீடாக செலுத்த சம்மதித்தது. 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்காக ரகசியங்களை விற்ற உளவு புகாரில் தவறாக கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு ஆளான நம்பி நாராயணனுக்கு கேரள அரசு 170 ஆயிரம் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக செலுத்துவதற்கு சம்மதித்தது குறிப்பிடத்தக்கது.