ரிஷாப் சூறாவளி சதம்; இந்திய அணி ரன் குவிப்பு| Dinamalar

பர்மிங்காம்: ஐந்தாவது டெஸ்டில் ‘சூறாவளி’ போல சுழன்று அடித்த ரிஷாப், சதம் விளாசினார். ரவிந்திர ஜடேஜாவும் அரைசதம் அடிக்க, இந்திய அணி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இங்கிலாந்து மண்ணில் கடந்த ஆண்டு இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது.

கொரோனா காரணமாக மான்செஸ்டரில் நடக்க இருந்த 5வது டெஸ்ட் ஒத்திவைக்கப்பட்டது. இப்போட்டி நேற்று பர்மிங்காமில் துவங்கியது. இந்திய அணி புதிய கேப்டனாக பும்ரா களமிறங்கினார். கபில்தேவுக்கு அடுத்து, 35 ஆண்டுக்குப் பின் கேப்டன் ஆன இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனார்.

‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அனுபவ சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், சேர்க்கப்படவில்லை. இத்தொடரில் எந்த டெஸ்டிலும் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார்.

புஜாரா துவக்கம்


இந்திய அணிக்கு ‘சீனியர்’ புஜாரா, ‘ஜூனியர்’ சுப்மன் கில் ஜோடி துவக்கம் தந்தது. சுப்மன் 17 ரன் எடுத்து, ஆண்டர்சன் பந்தில் அவுட்டானார். அடுத்து புஜாராவுடன் இணைந்தார் ஹனுமா விஹாரி. இருவரும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்த, ரன் வறட்சி ஏற்பட்டது. முதல் 6 ஓவரில் 26 ரன் எடுத்த இந்தியா, அடுத்த 11 ஓவரில் 19 ரன் மட்டும் எடுத்தது. இந்த நெருக்கடியில், ஆண்டர்சன் பந்தில் புஜாரா (13) அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

திடீர் சரிவு


அடுத்து வந்த கோஹ்லி, பாட்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்திய அணி 53/2 ரன் எடுத்த போது, மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. 2 மணி நேர தாமதத்துக்குப் பின் மீண்டும் போட்டி துவங்கியது. விஹாரி 20 ரன் எடுத்தார். அடுத்த சில நிமிடத்தில் கோஹ்லி (11) போல்டானார். ஸ்ரேயாசும் (15) கைவிட, இந்திய அணி 98/5 ரன் என திணறியது.

latest tamil news

ரிஷாப் நம்பிக்கை


பின் ரிஷாப், ஜடேஜா இணைந்து அணியை மீட்டனர். ஜாக் லீச் வீசிய 37வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் என 14 ரன் விளாசினார் ரிஷாப். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷாப், 89 வது பந்தில், சதம் கடந்தார். இங்கிலாந்துக்கு எதிராக இவர் அடித்த 3வது சதம் இது. இவருக்கு சூப்பரான ‘கம்பெனி’ கொடுத்த ஜடேஜா, அரைசதம் எட்டினார்.

latest tamil news

ஆறாவது விக்கெட்டுக்கு 222 ரன் எடுத்த போது, ரூட் சுழலில் சிக்கினார் ரிஷாப் (146 ரன், 111 பந்து). ஷர்துல் (1) நீடிக்கவில்லை. முதல் நாள் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட்டுக்கு 338 ரன் எடுத்திருந்தது. ஷமி (0), ஜடேஜா (83) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3, பாட்ஸ் 2 விக்கெட் சாய்த்தனர்.

latest tamil news

ஆசிய மண்ணுக்கு வெளியே, அதிக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பரானார் ரிஷாப். இவர் 4 சதம் அடித்துள்ளார். விஜய் மஞ்ச்ரேகர், அஜய் ரத்ரா, சகா தலா 3 சதம் விளாசினர்.

டெஸ்ட் அரங்கில் 5வது சதம் அடித்தார் ரிஷாப். இந்த அனைத்து சதமும், தொடரின் கடைசி டெஸ்டில் அடிக்கப்பட்டன.

latest tamil news

ஆசிய மண்ணுக்கு வெளியே நடந்த டெஸ்டில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இந்திய வீரர்களில் ரிஷாப் (89 பந்து) மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரு இடத்தில் சேவக் (78 பந்து, விண்டீஸ், 2006), முகமது அசார் (88 பந்து, இங்கிலாந்து, 1990) உள்ளனர்.

நேற்று 80 ரன் எடுத்த போது, டெஸ்ட் அரங்கில் 2000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார் ரிஷாப். இவர் 31 டெஸ்டில் 2066 ரன் எடுத்துள்ளார்.

சர்வதேச அரங்கில் கடந்த 2019, நவ. 23ல் வங்கதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் சதம் அடித்தார் கோஹ்லி. இதன் பின் 18 டெஸ்டில் பங்கேற்ற இவர் ஒரு சதமும் அடிக்கவில்லை. சராசரி 27 ஆக குறைந்து விட்டது. * ஒட்டுமொத்தமாக மூன்று வித கிரிக்கெட்டிலும் 2019க்குப் பின் களமிறங்கிய 74 இன்னிங்சில், எந்த ஒரு சதமும் அடிக்கவில்லை. கடைசி 31 போட்டிகளில் இவரது பேட்டிங் சராசரி 27.48 ஆக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.