யாரோ விரித்த சதியின் வலையில் சிக்கி தேச துரோகி என்ற பட்டத்தை சுமந்த ஒரு மாபெரும் மனிதனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகின் முன் எடுத்துக்காட்ட நினைத்த மாதவனின் அந்த நேர்மையான எண்ணம் படத்தில் தெரிகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே மாதவன் நடித்து இயக்கியுள்ள ‘ராக்ட்ரி – தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக மாதவன் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பதற்கான ஒட்டுமொத்த விடையும் திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு நிச்சயம் கிடைத்திருக்கும். ஆமாம், உண்மையான விஞ்ஞானியாக நாட்டிற்காக பல தியாகங்களை செய்து, பின்னர் யாரோ விரித்த சதியின் வலையில் சிக்கி தேச துரோகி என்ற பட்டத்தை சுமந்த ஒரு மாபெரும் மனிதனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகின் முன் எடுத்துக்காட்ட நினைத்த மாதவனின் அந்த நேர்மையான எண்ணம் படத்தில் தெரிகிறது.
நீண்ட நெடிய ஆய்வுகளை மேற்கொண்டு பல வருட காத்திருப்புகளுக்கு பிறகு இந்த படைப்பை மாதவன் உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தை எடுத்துமுடித்த பின்னர் மாதவனுக்கு நிச்சயம் ‘நம்பி நாராயணனுக்கு தான் நினைத்ததை செய்து முடித்துவிட்டதாக முழு நம்பிக்கை பிறந்திருக்கும். இந்திய உலகில் செய்த சாதனையும் மனதில் நிறைந்திருக்கும். இவையெல்லாம் சேர்ந்துதான் கடந்த ஒரு வாரமாக புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதத்தில் ஒரு உணர்ச்சி வசப்பட்ட நிலை தென்பட்டது. தன்னுடைய இந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையின் காரணமாக அவரது வார்த்தைகளில் சில தடுமாற்றங்களும் இருந்தது உண்மைதான். ஏதோ ஒன்றினை சாதித்துவிட்ட அந்த உணர்வு அவரிடம் வெளிப்பட்டது. நிச்சயமாக மாதவன் தான் நினைத்ததை சாதித்துவிட்டார் என்பதை அவரது படம் நிரூபித்துள்ளது.
மாதவன் செய்த மிகப்பெரிய தியாகம்!
படம் கிட்டதட்ட க்ளைமேக்ஸை நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்னும் சில நிமிடங்கள்தான். அதுவரை நம்பி நாராயணனாகவே வாழ்ந்த மாதவன் திடீரென மறைந்து போகிறார். அவரது முகம் மறைந்து போகிறது. ஆனால், நம்பி நாராயணன் கதாபாத்திரம் அங்கேயேதான் இருக்கிறது. ஆம், கடைசி சில நிமிடங்கள் நிழல் நம்பி நாராயணனுக்கு பதிலாக நிஜ நம்பி நாராயணனை வைத்தே படத்தை எடுத்து முடித்துள்ளார்கள். பேட்டியில் ஆரம்பித்த படம் பேட்டியில் நிறைவடைகிறது. முடியும் வரை மாதவன் முகத்தையே பார்த்து வந்த ரசிகர்களுக்கு கடையில் அப்படியே அந்த முகத்தில் நிஜ நம்பி நாராயணனை மாற்றிவிடுகிறார்கள். இது கிட்டதட்ட நிஜ நம்பி நாராயணன் முகத்தை ஒட்டு மொத்த படத்திற்கு பொருத்திவிடுகிறது. இது உண்மையில் நல்ல யுக்தி. வழக்கமாக படம் முடிந்த பிறகு மாண்ட்டேஜ் ஆகத்தான் சேர்ப்பார்கள். குடியரசுத்தலைவர் கையில் அவர் விருது வாங்கும் நிகழ்வை சேர்த்துள்ளார்களே அதுபோல். ஆனால், இதில் கதையோட்டத்துடன் வழியில் எவ்வித சலனமும் இல்லாமல் மாதவனின் முகம் மறைந்து நிஜ நம்பியின் முகம் நம் மனதை ஆட்கொண்டு விடுகிறது.
வழக்கமாக ஒரு நடிகர் தன்னுடைய முகம் எல்லோர் மனதிலும் பதிய வேண்டும் என்பதில் அக்கறையுடன் இருப்பார்கள். தன்னுடைய கதாபாத்திரம் எப்படி திரைப்படம் பார்த்த பிறகும் மனதில் நிற்க வேண்டும் என்பதிலும் கருத்தாக இருப்பார்கள். அதுவும் தான் இயக்கும் படத்தில் அதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்துவார்கள். ஆனால், மாதவன் இதனையெல்லாம் முழுசாக விட்டுக்கொடுத்து படம் முடியும் போது நம்பி நாராயணனின் தியாகத்தை தவிர்த்து வேறு எதுவும் ஆடியன்ஸ் மனதில் இருக்கக் கூடாது என தெளிவாக இருந்திருக்கிறார். அதனை செய்தும் காட்டியிருக்கிறார். இதற்காகவே நிச்சயம் மாதவன் போற்றுதலுக்கு உரியவர். ஒரு விஞ்ஞான நம்பி நாராயணன் செய்தது ஒப்பிட முடியாதது. ஒரு நடிகராக மட்டுமே மதவனின் செயல்பாட்டினை இங்கே குறிப்பிட்டுள்ளோம்.
சிறப்பான சம்பவம் செய்த சூர்யா!
கடைசி நிமிடங்களில் சூர்யா நடிப்பும் அந்த காட்சி எடுக்கப்பட்ட விதமும் நம்பி நாராயணனுக்காக நம்மை கண்ணீர் விட வைக்கிறது. உண்மையில் நம்பி நாராயணனுக்கு இதனை சிறப்பாக ஒரு திரைப்படத்தில் செய்துவிட முடியுமா என்று தெரியவில்லை. மாதவன் உண்மையில் சிறந்த இயக்குநர் என்பதை காட்டிலும் நம்பியின் மீதும் அவர் வைத்திருக்கும் மரியாதையும் அவருக்காக செய்த நினைத்ததையும் உறுதியுடன் செய்திருக்கிறார். மாதவன் கொடுத்த பணியை சூர்யா செவ்வனவே செய்து முடித்திருக்கிறார். தொடக்கத்திலேயா சூர்யா – மாதவன் இடையிலான காட்சியும் மிகவும் அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கும். அவர்களுக்கு இடையிலான உரையாடல் ஒரு அழகான தொடக்கம்.
மோடியின் குரலுடன் முடியும் திரைப்படம்
நம்பி நாராயணனுக்கு இந்திய அரசின் சார்பில் பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவர் பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் கைகளில் வாங்கும் காட்சியுடன் திரைப்படத்தை முடித்துள்ளார். அந்த விருது வழங்கும் நிகழ்வின் சில நொடிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த காட்சியின் போது பின்னணியின் பிரதமர் மோடியின் குரல் வருகிறது. அதில், இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி புகழ்ந்து பேசுவது போல் உள்ளது.