சிவில் சர்வீஸ் தேர்வில் ஈரோடு அருகேயுள்ள சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருபானந்த் என்ற மாணவர் இந்திய வனப்பணிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள சென்னம்பட்டி ஜர்த்தல் பகுதியைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ் – ஹேமலதா தம்பதியினரின் இரண்டாவது மகன் கிருபானந்த். இவர், கடந்த 27 ஆம் தேதி வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் 16-வது இடமும் தமிழக அளவில் முதலிடம் பெற்று இந்திய வனப் பணிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.
வெற்றிபெற்ற அவருக்கு, அவரது அப்பா தங்கராஜ் மற்றும் தாய் ஹேமலதா ஆகியோர் இனிப்புகள் ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிருபானந்த், தான் கடந்த 10 ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் தேர்விற்காக கடினமாக உழைத்து வந்தேன். இப்போது ஒன்பதாவது முறையாக தேர்வு எழுதியதில் வெற்றி பெற்றுள்ளேன் என்று தெரிவித்தார்.
மேலும் கிருபானத்தின் சகோதரர் தயானந்த் ஏற்கனவே சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று ஐஆர்எஸ் பணியில் இருக்கிறார். விவசாய குடும்பத்தில் பிறந்து தனது கடின முயற்சியால் ஐஎப்எஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள கிருபானத்திற்கு அவரது நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM