சென்னை: “பத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓரிடத்தில் ஒன்றாக கூடுகின்ற நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும், அங்கு அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து கொள்வது அவசியம்” என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில் இந்திய மகளிர் சிறப்பு சிறுநீரியல் சங்கம் மற்றும் எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையும் இணைந்து நடத்தும் மகளிர் சிறப்பு சிறுநீரியல் சர்வதேச மாநாட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூலை 1) தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழகத்தைப் பொறுத்தவரை, கரோனா தொற்று பாதிப்பு நேற்றும், இன்றும் 2 ஆயிரத்தை கடந்த நிலை நீடித்துக் கொண்டிருக்கிறது.
பெரிய அளவில் உயிரிழப்புகள் போன்ற பாதிப்புகள் இல்லையென்றாலும், பரவும் தன்மையைப் பொறுத்தவரை வேகமாக பரவும் தன்மை உடையது என்பதால், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு வந்தாலும்கூட, வயது வித்தியாசமில்லாமல் அனைவருக்குமே இந்த பாதிப்பு தொடர்கிறது.
இதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு, அரசின் விதிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். 10-க்கும் மேற்பட்டவர்கள் ஓரிடத்தில் ஒன்றாக கூடுகின்ற நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும், அங்கு அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து கொள்வது அவசியம்” என்று அவர் தெரிவித்தார்.