ஓசூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதி விவசாயிகளுக்கு 6 ஆண்டுகள் நிலையான வருவாய் தரும் பட்டன் ரோஜா 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பட்டன் ரோஜா சாகுபடி செய்யப்படுகிறது. ஒருமுறை சாகுபடி செய்யப்பட்ட பட்டன் ரோஜா செடிகள் தொடர்ச்சியாக 5 முதல் 6 ஆண்டுகள் வரை நிலையான லாபம் கொடுப்பதால், இப்பகுதியில் பட்டன் ரோஜா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு லாபம் ஈட்டி வருகின்றனர்.
இங்கு அறுவடை செய்யப்படும் பட்டன் ரோஜா வகைகள் தினசரி சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் விற்பனைக்குச் செல்கிறது.
ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வருவாய்: இதுதொடர்பாக தளியைச் சேர்ந்த விவசாயி வெங்கடேசன் கூறியதாவது:
”விவசாயிகளுக்கு ஆண்டுமுழுவதும் நிலையான லாபம் தரும் மலராக பட்டன் ரோஜா உள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ பட்டன் ரோஜா ரூ.20 வரை விற்பனையான நிலையில், இந்தவாரம் ரூ.100 ஆக விலை உயர்ந்துள்ளது. சராசரியாக ரூ.50-க்கு விற்பனையாகிறது. ஒரு ஏக்கர் பரப்பளவில் ஒரு மாதத்துக்கு ரூ.30 ஆயிரம் என ஆண்டுக்கு சராசரியாக ரூ.3 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது.
ஒரு ஏக்கருக்கு சுமார் 2,800 நாற்றுகள் தேவைப்படுகின்றன. ஒரு ஏக்கரில் 7அடி இடைவெளியில் 40 வரிசைகள் அமைத்து, ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் 1.75 அடி இடைவெளிவிட்டு நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 3 மாதங்களில் பட்டன் ரோஜா அறுவடைக்கு தயாராகி விடும்.
செடிகளை சொட்டுநீர் பாசனம் மூலமாக முறையாக பராமரித்து வந்தால் 5 முதல் 6 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக பலன் கொடுக்கும். தொடக்கத்தில் ஒரு ஏக்கரில் தோட்டம் அமைக்க ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. மலர்கள் பூத்ததும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 500 கிலோ அறுவடை செய்யப்படுகிறது” இவ்வாறு அவர் கூறினார்.