இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் சந்தித்த சவால்கள், சர்ச்சைகள், தேசத் துரோக வழக்கு, அவர் நிகழ்த்திய சாதனைகள் போன்றவற்றை நிஜத்தின் அருகிலிருந்து படம் பிடித்துக் காட்டுகிறது இந்த ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’.
இந்தியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானியான நம்பி நாராயணன் விண்வெளி ஆய்வு தொடர்பான ரகசியங்களைப் பாகிஸ்தானுக்கு விற்றார் என்று தேசத் துரோக வழக்கு ஒன்று பதியப்படுகிறது. அவர் குடும்பத்தினர் ஊர் மக்களால் அவமானப்படுத்தப்பட, நம்பி நாராயணன் கைது செய்யப்படுகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, இதுகுறித்த தன் தரப்பு நியாயங்களை டிவி பேட்டி ஒன்றில் ஃப்ளாஷ்பேக்காகப் பகிர்ந்து கொள்கிறார் நம்பி நாராயணன். ஓர் ஆராய்ச்சி மாணவராக பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தொடங்கிய அவரின் பயணம், VIKAS இன்ஜின் உருவாக்கம், விக்ரம் சாராபாய், அப்துல்கலாம் தொடங்கி நீல் ஆம்ஸ்ட்ராங்க் உடன் வரையான அவரின் நட்பு, சோவியத் யூனியனில் அவர் நிகழ்த்திய ஜேம்ஸ் பாண்ட் பாணியிலான சாகசங்கள் எனப் பலவற்றின் தொகுப்பாகப் படம் விரிகிறது.
நம்பி நாராயணனை அச்சு அசலாக அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார் மாதவன். இளமைப் பருவத்தில் பழைய மேடி நம் கண்முன் தெரிந்தாலும், நடுத்தர வயது, வயதான கெட்டப் போன்றவற்றில் நம்பி நாராயணனே வெளிப்படுகிறார். வயதாக ஆக மாறும் உடல்மொழி, வசன உச்சரிப்பு என எல்லாவற்றுக்கும் ஒரு நடிகராக நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். உடன் பணிபுரியும் விஞ்ஞானிகள் கூட்டத்தில் உன்னியாக வரும் சாம் மோகன் பாத்திரம் மட்டும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.
நம்பி நாராயணனின் மனைவியாக சிம்ரன், விக்ரம் சாரா பாயாக தமிழ் வெர்ஷனில் ரவி ராகவேந்திரா, அப்துல் கலாமாக குல்ஷன் குரோவர், சி.பி.ஐ அதிகாரியாக கார்த்திக் குமார் எனப் பலரும் வந்து போகின்றனர்.
கௌரவ வேடம்தான் என்றாலும் சூர்யாவின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் எமோஷனலாக நம்மையும் கட்டிப்போடுகிறது. நம்பி நாராயணனின் போராட்டத்தைப் புரிந்துகொண்டு ஆதரவுக் குரல் கொடுக்கும்போதும் அவரிடம் ஒட்டுமொத்த இந்தியர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கும்போதும் ஒரு நடிகராக நெகிழச் செய்கிறார் சூர்யா. அவருடன் நிஜமான நம்பி நாராயணன் திரையில் தோன்றும் காட்சிகள் ஒருவித குற்றவுணர்வை நமக்குமே கடத்திவிடுகின்றன.
ஒரு ராக்கெட் ஏவுவது என்ற நிகழ்வுக்குப் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது, அந்தத் துறையை ஆக்கிரமித்திருக்கும் வல்லரசு நாடுகளுடன் இந்தியா எப்படியெல்லாம் போராடி இந்த இடத்திற்கு வந்தது என்பதை விவரிக்கும் காட்சிகள் மாஸ் மீட்டரை உயிர் பெற வைக்கின்றன. குறிப்பாகப் பிரமிப்பூட்டும் அந்த இடைவேளை காட்சி அப்ளாஸ் ரகம்.
நம்பி முதன்முதலில் வெளிநாட்டுப் பேராசிரியரிடம் சேர்வதற்கு மேற்கொள்ளும் பிரயத்தனங்கள், மனைவியுடனான அவரின் நெகிழ்ச்சிக்கணங்கள் போன்றவை சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அறிவியல் தொடர்பான காட்சிகளின் நம்பகத்தன்மையில் எந்தவித சமரசமும் செய்யாமல் கடினமான விஷயங்களைக்கூடத் தெளிவாக எடுத்துரைக்க முயன்றிருக்கிறார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய மாதவன். ஆனால், அதுவே முதல் பாதியில் நம்மைப் படத்தோடு ஒன்றவிடாமல் தடுக்கிறது. அதீதமாக அறிவியல் தொடர்பான விஷயங்களை நுழைத்தது ஓர் ஆவணப்படத்தைப் பார்க்கும் உணர்வையே கொடுக்கிறது.
நம்பி நாராயணன் சந்தித்த அந்த ஜோடிக்கப்பட்ட வழக்குதான் சாராம்சம் என்னும்போது அது தொடர்பான காட்சிகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளித்து, அதன் பின்னணி குறித்தும் பேசியிருக்கலாம். நம்பி ஏன் சதிவலையில் சிக்க வைக்கப்பட்டார், அதன் பின்னால் இருந்தவர்கள் யார் என்பது குறித்து பார்வையாளர்களுக்குத் தெளிவாக விளக்கியிருக்கலாம். அதே போல், ஓர் இயக்குநராக எமோஷனல் காட்சிகளை மாதவன் இன்னமும் சிரத்தையுடன் அணுகியிருக்கலாம். துரோகம், தோல்வி, சர்ச்சை போன்றவை பிற சாதாரண காட்சிகளைப் போன்றே நம்மைக் கடந்து செல்கின்றன.
சாம் சி.எஸ்-ஸின் வழக்கமான மேஜிக் பின்னணி இசையில் மிஸ்ஸிங். பில்லி டாசன், நேட் கார்னெல் இசையமைத்த பாடல்களும் அந்நியப்பட்டே நிற்கின்றன. செர்ஷா ரேவின் ஒளிப்பதிவு வெளிநாட்டில் நடக்கும் காட்சிகளை அதற்குரிய அழகியலுடன் திரையில் வார்த்திருக்கிறது. அறிவியல் சாதனங்கள், அதற்கான கிராபிக்ஸ் காட்சிகள் போன்றவற்றில் பெரிதாகக் குறையேதும் இல்லை.
பயோபிக் என்றாலே டாக்கு-டிராமா டெம்ப்ளேட் என்பதைத் தவிர்த்து, நம்பி நாராயணன் சந்தித்த வழக்கு குறித்த பின்னணியையும் கொஞ்சம் கூடுதலாக விவரித்திருந்தால், இந்த ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ இன்னமும் உச்சம் தொட்டிருக்கும். இருந்தும் மாதவனின் நடிப்புக்காகவும், நம்பி நாராயணன் குறித்த முக்கியமான ஆவணம் இது என்பதற்காகவும் இந்த ராக்கெட்டை அண்ணாந்து பார்த்து சல்யூட் வைக்கலாம்.