தனக்கென தனி பாணியை கொண்டு கடந்த இருபது ஆண்டு காலமாக தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் ஹரி. அவர் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘யானை’ திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அத்திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் நம்மிடையே பகிர்ந்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ஹரி.
1. நீங்கள் திரைத்துறைக்கு வந்து 20 வருடங்கள் ஆகின்றன. அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
எனக்கு சினிமா நிறைய அனுபவங்களைத் தந்திருக்கு. சினிமால இருக்குறதே சந்தோஷம்தான். அதில் தொடர்ந்து வேலை பார்ப்பது இன்னும் சந்தோஷம். இத்தனை நாள் சினிமா எனக்கு கொடுத்ததுக்கு நன்றி கடனா என் வேலையை ஒழுங்கா செஞ்சிட்டு இருக்கேன்.
2. அருண் விஜயோடு இணைந்து பணியாற்றுவது இதுதான் முதல் முறையா அல்லது இதற்கு முன்பே இணையும் வாய்ப்பு வந்து தள்ளிப்போனதா?
இல்லை. இப்ப தான் நாங்க ரெண்டு பேரும் ஒன்னா வொர்க் பண்றோம். இதுக்கு முன்னாடி அவரும் கேட்டதில்ல. நானும் கேட்டதில்ல. ஆனா, அவர் இந்த இடத்திற்கு வருவதற்கு ரொம்பவே கஷ்டப்பட்டார். சரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து இந்த இடத்திற்கு வந்திருக்கார். வந்தவுடனேயே நான் அவரை இழுத்துக்கிட்டேன். எனக்கு தேவை மக்கள் விரும்பும் ஒரு கமர்ஷியல் ஆக்டர். ஏன்னா, நான் கமர்ஷியல் படம்தான் பண்ணப்போறேன். எனக்கு பாலா சார் மாதிரி முழு நேர சினிமா படைப்பாளனாகக் எல்லாம் படம் பண்ணத் தெரியாது. அருண் விஜய்யின் தடம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. `என்னை அறிந்தால்’ படம் வெளியானப்போ, அஜித் சாருக்கும், கௌதம் சாருக்கும் கால் பண்ணி வாழ்த்துகள் சொன்னேன். அவ்ளோ பெரிய ஸ்டார், இன்னொரு நடிகருக்கு இணையா ஸ்பேஸ் கொடுக்குறதுக்கெல்லாம் ஒரு நல்ல மனசு வேணும்.
3. உங்களுடைய முதல் படம் முதல் ஷாட் நியாபகம் இருக்கிறதா?
என்னோட முதல் படம் முதல் ஷாட் ஒரு கோயிலில் நடந்தது. அந்தப் படம் பேரு தமிழ், பிரசாந்த் ஹீரோவா நடிச்சாரு. அன்னைக்கு முழு நேரம் அவரை வச்சு தான் ஷூட்டிங் பண்ணோம். முதல் நாளே நாலு ஷிப்ட் போட்டோம். அப்ப தான் தயாரிப்பாளருக்கு நம்பிக்கை வரும். அதே மாதிரி அவருக்கும் நம்பிக்கை வந்துச்சு. அந்த படம் வசூலைத் தாண்டி எனக்கு முதல் படத்திலேயே நல்ல பேரு வாங்கி கொடுத்துச்சு. எனக்கு முதல் படம் பண்ணும்போதுகூட பெருசா பயம் இல்லை. ஆனா, தொடர்ந்து சாமி, சிங்கம் எல்லாம் பண்ணும்போதுதான் இன்னும் பயம் அதிகமாயிடுச்சு. இப்பலாம் முதல் நாள் ஷூட்டிங் போறதுக்கே எனக்கு பயமா இருக்கு.
4. நீங்கள் எடுத்ததில் சாமி படம் மக்களிடையே நிறைய ரீச் ஆனது. அதைப் பற்றி…
அதுல வர்றது எல்லாமே அப்படியே யோசிச்சு, அப்படியே நடந்ததுதான். அதுல விக்ரம் வரும் காட்சில இட்லில பீர் ஊத்தி சாப்பிடுவாரு. அது அப்போதைக்கு லோக்கலா இருக்குமேனு நினைச்சு எடுத்தது. ஆனா அதுக்காக இப்ப நான் வருத்தப்படுறேன். ஏனா, நான் போதைப் பழக்கத்திற்கும் மதுவுக்கும் எதிரானவன். இனிமே வர சந்ததிகளையாச்சும் இது எல்லாம் இல்லாம நல்ல வழியில கூட்டிட்டு போவோம்.
5. உங்கள் படம் எல்லாவற்றிலும் பரபரப்பிற்கு பஞ்சமே இருக்காது. அதே சமயம் சில நேரங்களில் ஜனரஞ்சகமாகவும் இருக்கும். அது ஏன்?
முன்னாடியெல்லாம் அருவாவ எடுத்துக்கிட்டு ரோட்டுல சுத்தறதெல்லாம் ரொம்பவே சகஜமான விஷயம். நீங்க நிறைய ஊருக்கு போய் பார்த்தா உங்களுக்குத் தெரிய வரும். ஆனா இப்ப அதெல்லாம் குறைஞ்சிருக்கு நிறைய பேர் படிக்க ஆரமிச்சிட்டாங்க. கிராமங்கள் எல்லாம் முன்னேறிடுச்சு. ஆனா இன்னும் ஒரு சில இடங்கள் அப்படிதான் இருக்கு. நாம கள எதார்தத்தைத்தான் பதிவு பண்றோம்.