டெல்லி: அக்னிபாதை திட்டத்தின் கீழ் ராணுவம் மற்றும் கடற்படையில் சேர ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் அக்னிபாதை திட்டத்தின் கீழ், 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் 17 முதல் 23 வயதுக்கு உட்பட்ட அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒன்றிய அரசின் இத்திட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும், ராணுவத்தில் சேர முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நாடு முழுவதும் பல மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்தன. இத்திட்டத்தை கைவிடும்படி எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வரும் நிலையில், திட்டத்தை கைவிட முடியாது என ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. மேலும், அக்னவீரர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் தொடர்ந்து அறிவித்து வருகிறது. இதனிடையே விமானப்படைக்கான அக்னிவீரர்கள் தேர்வுக்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியது. இதில், நேற்று வரையில் 2.72 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், ராணுவம், கடற்படைக்கான அக்னிவீரர்கள் தேர்வுக்கான ஆன்லைன் முன்பதிவும் நேற்று முதல் தொடங்கியது. இது தொடர்பாக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கடற்படை, ராணுவத்துக்கான அக்னிவீரர் தேர்வு ஜூலை 1 முதல் தொடங்குகிறது. ராணுவத்தில் இணைந்து, நாட்டுக்கு அக்னிவீரர்களாக சேவையாற்றும் உங்கள் கனவை நனவாக்குங்கள்,’ என்று கூறப்பட்டுள்ளது.