தாய் தந்தையை கவனித்துக் கொள்வதையே சுமையாக கருதும் இந்த காலத்தில் தாத்தாவுக்கு தினமும் 8 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து சாப்பாடு கொடுத்து கவனித்துவரும் மாணவிக்கு மிஸ் இண்ஸ்பயர் விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கபரிசு வழங்கப்பட்டுள்ளது…
பெற்றெடுத்து… நன்கு படிக்க வைத்து…பாராட்டி சீராட்டி வளர்த்த தாய் தந்தையரையே கால ஓட்டத்தில் கை உதறி காப்பகங்களில் சேர்த்து விடும் பிள்ளைகள் பெருகி விட்ட இந்த காலத்தில் தான் தாத்தாவுக்காக தினமும் காலையும் மாலையும் சளைக்காமல் 8 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து செல்லும் கமலா போன்ற கிராமத்து தேவதைகளும் வலம் வருகின்றனர்..!
இராமநாதபுரம் மாவட்டம் , முதுகளத்தூர் , உடையார்குளத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவி கமலா. உலையூர் அரசு பள்ளியில் தற்போது 10 ஆம் வகுப்பு படித்து வரும் கமலா தனது 9 வயது முதல் உலையூரில் வசித்து வரும் தனது அம்மாவின் தந்தையான தாத்தாவுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளையும் தவறாமல் சாப்பாடு கொண்டு சென்று பசியாற்றி வருகின்றார்.
அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் கமலாவின் பயணம் , தாத்தாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு பள்ளிக்கு சென்று பாடங்களை கற்பது. பள்ளி முடிந்து ஊருக்கு திரும்பியதும் மாலை உணவு கொண்டு செல்வது என கடந்த 7 வருடங்களாக சனி ஞாயிறு என்று விடுமுறை ஏதுமின்றி தன்னலம் மறந்து பேரன்புடன் புட் எக்ஸ்பிரஸ்ஸாக அந்த பெரியவரின் பசியாற்றி வரும் கமலா , தனது தாத்தாவை அய்யா என்று உள்ளன்போடு குறிப்பிடுவது அவர் மீதான மரியாதையை உணர்த்துகிறது.
மாணவி கமலாவின் இந்த உணவு சேவையை பாராட்டி முயல்பவுண்டேசன் என்ற அமைப்பின் பரிந்துறையின் பேரில் AGILISIM மென்பொருள் நிறுவனம் இந்த ஆண்டுக்கான மிஸ் இன்ஸ்பயர் என்ற விருதை வீடு தேடிச்சென்று கமலாவுக்கு வழங்கி கவுரவித்துள்ளது.
AGILISIM மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிவோர்களால் வழங்கப்படும் இந்த விருதை விழாவில் நடிகை ஆண்டிரியா வழங்கினார். விருதுடன் கிரீடம் சூட்டி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் மாணவிக்கு வழங்கப்பட்டது.
இந்த விருதை பெற்ற கமலாவோ, எல்லோருக்கும் நல்ல பண்புகளை கற்றுக் கொடுக்கும் ஆசிரியையாக வருவதே தனது லட்சியம் என்பதால் படிப்பிலும் கவனத்துடன் இருப்பதாக கூறுகிறார்
பெற்றோரையும் உற்றாரையும் கவனிப்பது வேலை அல்ல பொறுப்பு என்பதை இன்றைய இளைய தலைமுறையும், தலை நரைத்த நடுத்தர வயதுடையோரும் உணர வேண்டும்.
வலிகள் நிறைந்த தூரத்தை வலிமையோடு கடப்போருக்கு , செல்லும் வழிகள் தோறும் வரவேற்பு காத்திருக்கும் என்பதற்கு மாணவி கமலா நிகழ்காலச் சான்று..!