மதுரையில் திருமணத்துக்கு பார்த்த மாப்பிள்ளை பிடிக்காமல் இரு சட்டகல்லூரி மாணவிகள் லாட்ஜில் அறை எடுத்து தங்கி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளது…
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இரு தோழிகள் ஒருவர் திருச்சி சட்டக்கல்லூரியிலும், மற்றொருவர் நெல்லை அரசு சட்டக் கல்லூரியிலும் படித்து வந்தனர்.
முன்னதாக கலை அறிவியல் கல்லூரியில் படித்த போது உயிர் தோழிகளாக மாறிப்போன இருவருக்கும் வேறு வேறு சட்டக் கல்லூரியில் படிக்க வாய்ப்பு கிடைத்தாலும் வாரம் ஒரு முறை இருவரும் சந்தித்து கொள்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மதுரை மாவட்ட நீதி மன்றம் முன்பு உள்ள தங்கும் விடுதியில் தோழிகள் இருவரும் அறை எடுத்து தங்கிஉள்ளனர் . காலையில் நீண்ட நேரமாக கதவு திறக்காத நிலையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால் இரு மாணவிகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடினர்.
அவர்கள் இருவரையும் உடனடியாக மீட்டு அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்து இருவரின் உயிரையும் காப்பாற்றினர்.அவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து தற்கொலைக் கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.
தாங்கள் இருவரும் ஈருடல் ஓருயிராக நட்பில் கலந்து விட்டதாகவும், ஏற்கனவே சட்ட கல்லூரி தேர்வில் இருவரும் பிரிந்த நிலையில் தற்போது தங்களுக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து நிரந்தரமாக பிரிக்க நினைப்பதாகவும், ஆண்களை கண்டாலே வெறுப்பாக இருப்பதாகவும், தங்களுக்கு எந்த ஆணையும் திருமணம் செய்ய விருப்பம் இல்லை நாங்கள் இறந்த பின்னர் ஒரே குழியில் அடக்கம் செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இருவரும் தற்போது உடல் நிலை தேறிவருவதாகவும் அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைக்க இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.