ஜெய்ப்பூர் : உதய்பூரில் தையல் தொழிலாளி படுகொலை செய்யப்பட்டதற்கும் மும்பை தீவிரவாத தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மால்டாஸ் பகுதியை சேர்ந்த கன்னையா லால் என்ற டெய்லர், நுபுர் சர்மாவின் சர்ச்சை கருத்துக்கு ஆதரவு தெரிவித்து சமூகவலைதளங்களில் பதிவு போட்டதால், கடந்த 28ம் தேதி அவரை 2 பேர் தலை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்தனர்.இது தொடர்பாக பாகிஸ்தனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தாவ்த்-இ-இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய ரியாஸ் அக்தாரி, கோஸ் முகமது ஆகியோரை கைது செய்தனர். இருவரின் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து என்ஐஏ விசாரித்து வருகிறது.இந்த நிலையில் ரியாஸ் அக்தாரி,தனது மோட்டார் சைக்கிளுக்கு 2611 என்ற பதிவெண்ணை பெற கூடுதல் பணம் கொடுத்தார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மும்பை பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற தேதியுடன் அதனை இணைத்து பார்த்த அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். ரியாஸ் 2014ம் ஆண்டு நேபாளத்திற்கு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு அழைப்புகள் செய்ய அவரது தொலைபேசி பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.