உதய்பூரில் தையல் கடைக்காரரை கொலை செய்த கொலையாளிகளில் ஒருவர் பாஜகவை சேர்ந்தவர் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தலைவர்களுடன் கொலையாளி இருப்பதை போன்ற புகைப்படங்களையும் காங்கிரஸ் வெளியிட்டிருப்பது ராஜஸ்தானில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் நகரில் தையல் கடையை நடத்தி வந்த கன்னையா லால் என்பவரை கடந்த செவ்வாய்க்கிழமை இரு நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். மேலும், அந்த வீடியோவையும் அவர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய நுபுர் சர்மாவை ஆதரித்து ட்விட்டரில் கருத்துகள் தெரிவித்து வந்ததால், கன்னையா லாலை தாங்கள் கொலை செய்ததாக அந்த வீடியோவில் அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ராஜஸ்தான் மட்டுமின்றி நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கவுஸ் முகமது, ரியாஸ் கட்டாரி ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து என்ஐஏ அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
‘பாஜகவை சேர்ந்தவர்’
இந்நிலையில், கொலையாளிகளில் ஒருவரான ரியாஸ் கட்டாரி பாஜகவை சேர்ந்தவர் என காங்கிரஸ் அதிரடி குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கன்னையா லாலை கொலை செய்தவர்களில் ஒருவரான ரியாஸ் கட்டாரி பாஜக உறுப்பினர் ஆவார். பாஜக தலைவர்கள் இர்ஷாத் சைன்வாலா, முகமது தாஹிர் ஆகியோருடன் அவர் இருக்கும் புகைப்படங்களையும் காங்கிரஸ் வெளியிட்டிருக்கிறது. பாஜகவின் சிறுபான்மை பிரிவு நடத்திய பல நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டிருக்கிறார். இதற்கான அனைத்து ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கு பாஜக என்ன கூறப் போகிறது? என பவன் கேரா கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பிலேயே ரியாஸ் கட்டாரி, பாஜக தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் பவன் கேரா காண்பித்தார்.
பாஜக மறுப்பு
இந்த விவகாரம் குறித்து ராஜஸ்தான் பாஜக சிறுபான்மை பிரிவு தலைவர் சாதிக் கான் கூறுகையில், “கன்னையா லால் கொலையானது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியின் சட்டம் – ஒழுங்கு தோல்வியையை காட்டுகிறது. ஆனால், இதிலிருந்து மக்களை திசைதிருப்புவதற்காக கொலையாளிகளில் ஒருவரை பாஜகவை சேர்ந்தவர் என காங்கிரஸ் தற்போது கூறி வருகிறது. காங்கிரஸ் கூறுவதில் துளியும் உண்மை இல்லை. கொலையாளிகளுடன் பாஜகவுக்கு எந்த தொடர்பும் கிடையாது. விடுதலை புலிகள் இயக்கத்தினர் எப்படி காங்கிரஸில் இணைந்து, பின்னர் ராஜீவ் காந்தியை கொன்றார்களோ, அதே பாணியிலான கதையை காங்கிரஸ் கட்டமைக்க பார்க்கிறது” என அவர் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM