உதய்பூர் கொலை: கொலையாளிக்கு பாஜகவுடன் தொடர்பு?

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் நகரிலுள்ள மால்தாஸ் பகுதியில் கன்னையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் அத்துமீறி நுழைந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கன்னையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து அவரது தலையை துண்டித்தனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டனர். மேலும் பிரதமர் மோடிக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ், கவுஸ் முகமது ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நபிகள் நாயகம் குறித்து தவறாக கருத்து தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் கன்னையா லாலை அவர்கள் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் உதய்பூர் கொலை வழக்கில் சிக்கிய 2 பேரில் ஒருவர் பாஜக நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெய்லர் தலையை துண்டித்த ரியாஸ் அட்டாரி, பாஜக சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கலந்து கொண்டுள்ளார். மேலும், பாஜக சிறுபான்மை அணி நிர்வாகி தாஹிருடன் நெருங்கிய தொடர்பிலும் அவர் இருந்துள்ளார் எனவும், இர்சாத் சாய்ன்வாலா என்ற பாஜக சிறுபான்மை அணியை சேர்ந்த உள்ளூர் நிர்வாகி தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

முன்னதாக, இந்த சம்பவத்தால் ராஜஸ்தான் மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள், மோதல்கள் வெடித்து வருகின்றன. அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெல்லாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டும், கலவரம், வன்முறை சம்பவங்களை தவிர்க்கும் வகையிலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.