புதுடெல்லி: உதய்பூர் சம்பவம் தலிபான் மனநிலை கொண்டது. இது வெறும் பேச்சுக்கான எதிர்வினை அல்ல மாறாக ஒரு நம்பிக்கை அமைப்பின் தாக்கம் என்று ஆர்எஸ்எஸ் பிரிவின் விளம்பரப் பிரிவுத் தலைவர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த The Taliban: War and Religion in Afghanistan, The Forgotten History of India ஆகிய நூல்களின் வெளியீட்டு விழாவில் சுனில் அம்பேக்கர் இந்தக் கருத்தை பதிவு செய்தார். இந்த நூல்களை அருண் ஆனந்த் என்பவர் எழுதியிருக்கிறார்.
அப்போது அவர் உதய்பூர் சம்பவத்தைக் குறிப்பிட்டு தனது கருத்தை முன்வைத்தார். அதேபோல் வரலாற்றில் சில விஷயங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகிறது என்று குற்றஞ்சாட்டினார்.
முன்னதாக நேற்று, உச்ச நீதிமன்றத்தில் நுபுர் சர்மாவின் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், நுபுர் சர்மாவின் பேச்சால் இந்தியா பற்றி எரிகிறது. தனது பேச்சுக்காக நாட்டு மக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கோர வேண்டும். அவருடைய பேச்சுதான் உதய்பூரில் நடந்த சம்பவத்திற்கு தூண்டுதலாக இருந்துள்ளது என்று கருத்து தெரிவித்திருந்தது.
இதனை முன்வைத்துப் பேசிய சுனில் அம்பேகர், உதய்பூரில் நடந்த சம்பவம் தலிபான் மனநிலை கொண்டது. அது தூண்டுதலின் எதிர்வினை அல்ல. அது நம்பிக்கை அமைப்பின் தாக்கம். உலகில் ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ், தலிபான் என்ற பயங்கரவாத அமைப்புகள் இயங்குகின்றன. நம் நாட்டில் சிமி (SIMI), பிஎஃப்ஐ (பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா) ஆகியன இருக்கின்றன. ஆகையால் உதய்பூர் சம்பவம் பேச்சால் தூண்டப்பட்டது அல்ல. இதை இன்னும் உற்று ஆராய வேண்டும். அதற்கு சில நம்பிக்கை அமைப்புகளின் மனோபாவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய தேசம் தனது பலத்தை ஒருவருக்கொருவர் உதவும் வகையில் பயன்படுத்தவல்லது. ஒரு நல்ல மனிதம் அடுத்தவருக்கு உதவ வேண்டும். அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களை தடுக்க வேண்டும். பிரச்சினைகளை அரசியல் சாசனத்தின் வழியில் தீர்க்க வேண்டும். மக்கள் தலிபான் மனநிலையை பற்றி புரிந்து கொள்ள வேண்டும். நம் நாடு மத அடிப்படைவாதத்தால் பிரிவினையை சந்தித்தது. அதனால் நாம் இதனைப் புரிந்து கொள்வது அவசியம். அடிப்படைவாத தேசங்களுடன் இங்கிருப்பவர்கள் யாரேனும் தொடர்பில் இருக்கிறார்களா என்பதை கண்டறிய வேண்டும். நம்பிக்கை துரோகம் என்னவென்பதை உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்ட வேண்டும்.
பிரிவினை வரலாறு அறிவோம்: இந்த தேசத்தின் விடுதலைக்கு வித்திட்டவர்கள் ஏராளம். ஆனால், எல்லோரையும் பற்றி இங்கு பேசப்படுவதில்லை. ஐஎன்ஏ பற்றி யாரும் பேசுவதில்லை. ஆர்எஸ்எஸ்ஸின் பங்களிப்பு எப்போதும் மறைக்கப்படுகிறது. ஜூலை 12, 1922ல் டாக்டர் ஹெகடேவர் சிறையில் இருந்து விடுதலையானார். அவரை வரவேற்க நடந்த நிகழ்ச்சியில் ராஜாஜியும், மோத்திலால் நேருவும் பேசியிருப்பார்கள். அந்தப் பேச்சை எல்லாம் இப்போது வெளிக்கொணர்ந்து பிரபலப்படுத்த வேண்டும்.
மக்களுக்கு வி.டி.சவர்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிர்ஸா முண்டா ஆகியோர் பற்றி எடுத்துரைக்க வேண்டும். அப்போது தான் மக்கள் இந்தியா சுதந்திரத்திற்கு முன்னரும் ஒற்றுமையுடன் இருந்தது தெரியும். பிரிட்டிஷார் தான் இந்தியாவை ஒருங்கிணைத்தனர் என்ற போலி வரலாறு மறையும். வரலாற்றை பின்னோக்கிப் பாருங்கள். பொது உடைமையும், மதச்சார்பின்மையும் எப்படி அரசியல் சாசனத்தில் இடம்பெற்றது என்பது தெரிய வரும். இளைய சந்ததியனருக்கு இதை கொண்டு சேர்க்க வேண்டும்.
அதேபோல் இளைஞர்களுக்கு இந்தியப் பிரிவினை ஏன் ஏற்பட்டது என்பதையும் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். சில வரலாற்று நிகழ்வுகள் எப்போதும் விவாதிக்கப்படுவதே இல்லை. அதை விவாதித்தால் தான் மீண்டும் அத்தகைய சம்பவங்கள் நடக்காது. நாடு மீண்டும் தாக்கப்படாமல் இருக்க இந்தச் சம்பவங்களை அறிந்து கொள்வது அவசியம். பிரிவினை வரலாறு தெரிந்தால் தான் தீவிரவாதம் புகுந்த வரலாறும் தெரியவரும்.
இவ்வாறு அவர் பேசினார்.