மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மைத்துனர் ஸ்ரீதர் மகாதேவ் மீது ரூ. 84.6 கோடி மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது. இதனை சிபிஐ, அமலாக்கப்பிரிவு இணைந்து விசாரித்து வந்தன.
பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட போது புஸ்பக் புல்லியன் என்ற நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் ரூ.84.6 கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் செலுத்தப்பட்டது. தங்கம் விற்றது மற்றும் வாங்குவதற்காக இப்பணம் புஸ்பக் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பரிவர்த்தனையில் சந்தேகம் அடைந்த அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐ அது குறித்து விசாரணை நடத்தியது. இதையடுத்து புஸ்பக் நிறுவனம் அந்த வங்கியில் செலுத்தப்பட்ட ரூ.84.6 கோடியை ஸ்ரீதருக்கு சொந்தமான ஸ்ரீசாய்பாபா கிரகநிர்மிதி என்ற நிறுவனத்தின் வங்கிக்கணக்கிற்கு மாற்றியது. அவ்வாறு வந்த பணத்தில் ஸ்ரீதர் மகாதேவ் 11 வீடுகளை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் ஸ்ரீதர் மகாதேவிற்கு சொந்தமான ரூ.6.5 கோடி மதிப்புள்ள வீடுகளை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால் இவ்வழக்கில் ஸ்ரீதர் மகாதேவிற்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி கடந்த 2020-ம் ஆண்டு இவ்வழக்கு விசாரணையை முடித்துக்கொள்வதாக கூறி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அதனை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து தற்போது மீண்டும் ஸ்ரீதர் மகாதேவிற்கு எதிரான வழக்கு விசாரணையை முடித்துக்கொள்ளபோவதாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.
இதற்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் சிறப்பு நீதிமன்றம் விசாரணையை முடித்துக்கொள்ளும் சிபிஐ முடிவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும் ஒரு விசாரணை அமைப்பு மற்றொரு அமைப்பிடம் ஒரு குறிப்பிட்ட வழக்கை விசாரிக்கும்படி நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என்று தெரிவித்த நீதிபதி செய்யத், சிபிஐ இரண்டு முறை இவ்வழக்கு குறித்து முழுமையாக விசாரணை நடத்தி இருக்கிறது. நீதிமன்றம் எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறது என்று கூறி விசாரணையை முடிக்கும் சிபிஐ அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இவ்வழக்கில் வங்கி அதிகாரிகள் மற்றும் புஸ்பக் நிறுவனத்தின் சந்திரகாந்த் பட்டேல் ஆகியோரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.