சுற்றுலா என்றவுடன் பல்வேறு ஊர்கள் நினைவுக்கு வரும். எந்த ஊர் நினைவுக்கு வந்தாலும் சுற்றி பார்க்கிற இடங்களை தவிர்த்து திடீரென நம் நினைவுக்கு வருவது உணவு பற்றிய நினைவு. எல்லா ஊர்களிலும் உணவு விடுதியில் உணவு உண்ணுகிற வழக்கம் இருந்தாலும்கூட வீட்டு உணவுகள் மீது நமக்கு எப்போதும் ஒரு ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும்.
யாராவது சமைத்துக் கொடுக்க மாட்டார்களா என்கிற எண்ணம் நமக்குள் அலைமோதும். சுற்றுலா தலங்களில் எல்லா ஊர்களிலும் அப்படி வீட்டு முறை உணவு கிடைப்பதில்லை. சில ஊர்களில் வீட்டு முறை உணவு செய்து கொடுப்பதற்கு என்று சிலர் இருப்பார்கள். அவர்களிடம் பேரம் பேசி உணவு தயாரிக்க சொல்லுகிற வழக்கமுடையவர்கள் நிறையவே உண்டு. அப்படி வீட்டு முறை உணவு சமைத்து கொடுக்கிற பலரின் வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
“என் பேரு சங்கீதா. எனக்கு வயசு 35 ஆவுது. ஒகேனக்கல்தான் சொந்த ஊர். இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்தேன். ஒகேனக்கல் அப்படின்னு சொன்ன உடனே எல்லாருக்கும் ஞாபகம் வர்றது தண்ணீர், அருவி, பரிசல் அடுத்ததா மீன் உணவு. இங்க டூர் வரவங்க எல்லாரும் மீன் சாப்பிட ரொம்ப விரும்புவாங்க. என்னதான் கடைகளில் மீன் வறுவல், மீன் குழம்பு வச்சு இருந்தாலும் வீட்டு முறையில மீன் வறுவல், மீன் குழம்பு சாப்பிட தான் நிறைய பேர் விரும்புவாங்க. அதனால எங்கள மாதிரி கொஞ்சம் பேர் இங்கே வீட்டு முறை உணவு செஞ்சு கொடுக்கிற வேலையில இருக்கிறோம். அதுக்காக கொஞ்சம் காசும் கொடுப்பாங்க. அதையே நாங்க தொழிலா செய்ய ஆரம்பிச்சுட்டோம்.
இதுல வர்ற வருமானத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்தவும் ஆரம்பிச்சுட்டோம். வீட்ல இருக்கிற ஆம்பள ஆளுங்க வேலைக்கு போவாங்க. அதுவும் ஆறு சார்ந்த வேலைகளா இருக்கும். ஒன்னு பரிசில் ஓட்டறது, மசாஜ் பண்றது, வழிகாட்டுவது, சுமை தூக்குறது அப்படின்னு நிறைய வேலைகள் இந்த பகுதியில இருக்கு. டூர் வரவங்க தண்ணியை பார்த்ததும் ரொம்ப உற்சாகமாயிடுவாங்க. அதுக்கு பிறகு இங்கு இருக்கிற மீனை பார்த்ததும் சாப்பாட்டு ஞாபகம் வந்துடும். ஒரு கிலோ மீன் 150 ரூபாயில் தொடங்கி 600 ரூபாய் வரைக்கும் விக்கும்.
லோகு, கட்லா , பாறை, வாளை, கெண்டை, கெளுத்தி அப்படின்னு நிறைய வகை மீன்கள் விக்கும். அவங்க அவங்க தேவைக்கு தகுந்த மாதிரி குழம்பு மீனும் வறுவல் மீனும் வாங்கிக் கொடுப்பாங்க. மீன் வாங்கி சுத்தம் பண்ணி கொடுத்துட்டாங்கன்னா நாங்க குழம்பு வைக்கிறதும், வறுவல் செய்யற வேலையும் செஞ்சுடுவோம். சிலர் அரிசி குழம்பு சாமான் எல்லாம் வாங்கி கொடுப்பாங்க. இன்னும் சிலர் அதெல்லாம் நீங்களே வாங்கிக்கோங்க அப்படின்னு சொல்லுவாங்க. சாதாரணமா டூர் வரவங்க குழு குழுவாதான் வருவாங்க. கார்னா குறைந்தது அஞ்சு பேர் வர ஆரம்பிப்பாங்க. வேன்ல வந்தா 20 பேர் வரைக்கும் இருப்பாங்க. பஸ்ஸுன்னா 50 பேர் வரைக்கும் இருப்பாங்க.
ஐந்து பேரில் துவங்கி 50 பேர் வரைக்கும் சமைச்சு போடுவோம் நாங்க. சாதாரணமா அரிசி, மளிகை சாமான் வாங்கி அஞ்சு பேருக்கு சமைக்கணும்னா எங்க கூலியோடு சேர்த்து 700 ரூபாய் கொடுப்பாங்க. அதுவே ஆள் அதிகமா இருந்தா 2000, 3000, 5000 வரைக்கும் வாங்குவோம். காலைல 6 மணிக்கு எல்லாம் வேலைக்கு வந்துடுவோம். ஒரு செட்டோ, ரெண்டு செட்டோ ஆளுங்களுக்கு தகுந்த மாதிரி வேலை செய்ய ஆரம்பிச்சுடுவோம்.
ஒருமுறை நாங்க சமைத்து சாப்பிட்டாங்கன்னா எங்க போன் நம்பர் வாங்கிட்டு போயிடுவாங்க. அடுத்த முறை வரும்போது காலையிலேயே ராத்திரிக்கு டிபனும்கூட எங்ககிட்ட ஆர்டர் பண்ணிடுவாங்க. மீன் மட்டும் இல்லைங்க சிக்கன், மட்டன் கறி வகையும் நாங்க சமைப்போம். வரவங்க பரிசல்ல போய் மசாஜ் பண்ணிட்டு தண்ணீர்ல குளிச்சிட்டு பசியோட வந்த உடனே நாங்க தயாரா வச்சிருக்க சாப்பாட்ட, சாப்பிட்டு முடிச்சிட்டு அப்படியே எங்கே நிழல் கிடைக்குதோ அங்க படுத்து எந்திருச்சு ஊருக்கு கிளம்பிடுவாங்க.
எங்க குடும்பத்துல பெருசா பொம்பளைங்க படிக்கிறது இல்ல. அதிகபட்சமா 12-வது வரைக்கும் படிப்பாங்க. ஆம்பள பிள்ளைங்க டிகிரி வரைக்கும் படிச்சிட்டு இருந்தாலும் பரிசில் ஓட்டற வேலைக்கு கூச்சப்படாம வந்துடுவாங்க. எல்லா நாளிலும் வேலை இருக்குன்னு சொல்ல முடியாதுங்க. அதிகமா மே மாசம்தான் தினமும் வேலை இருக்கும். மத்த மாசமெல்லாம் வாரத்துக்கு மூணு நாள் வேலை கிடைக்கிறது பெரிய விஷயம். அதுல வர்ற வருமானத்தை வச்சிகிட்டு தான் குடும்பத்தை ஓட்டுறோம்.
எங்களுக்கு இந்த வேலை தவிர வேறு எந்த வேலையும் தெரியாது. காசு கம்மியா கொடுத்தாலும் சரி, நிறைய கொடுத்தாலும் சரி, அவங்க சாப்பிட்டு முடிச்சிட்டு மகிழ்ச்சியா போறத பார்க்கும்போது எங்களுக்கு வயிறு நிறைஞ்சிடும். தண்ணீர்தாங்க எங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்குது. அதிகம் வந்தாலும் சரி குறைவாக வந்தாலும் சரி” என்றார் சங்கீதா.
நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வது என்பது நம்மை சார்ந்து இருப்பவர்கள் கடமையாக இருந்தாலும் வெளியே இருந்து நம்முடைய தேவைகளை பார்த்து பூர்த்தி செய்கிற மனிதர்கள் அபாரமானவர்கள் என்று கருதலாம். அப்படி நம்முடைய உணவு தேவைகளை பூர்த்தி செய்கிற அபாரமானவர்களாக இவர்கள் விளங்குகிறார்கள். தொடர்ந்து அடுத்து ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையோடு சந்திப்போம்.
-ஜோதி நரசிம்மன்
முந்தைய அத்தியாயத்தை படிக்க… எளியோரின் வலிமைக் கதைகள் 33: ‘எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல’Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM