அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மொத்தம் உள்ள 2665 பொதுக்குழு உறுப்பினர்களில், 2400 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மேலும் அதிமுகவின் 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கின்றனர். மேலும், வரும் 11ஆம் தேதி நடக்கவுள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் ஒற்றை தலைமையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற விவகாரம் தொடங்கியது முதல் எடப்பாடி கே பழனிசாமி இல்லத்திலும், ஓ பன்னீர்செல்வம் இல்லத்திலும் நாள்தோறும் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஓ பன்னீர்செல்வன் இல்லத்திற்கு நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அதே சமயத்தில் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தின் முன்பு கூடும் கூட்டத்திற்கு குறைவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
ஓ பன்னீர்செல்வம் இல்லத்தின் முன்பு தொண்டர்கள் கூட்டம் கூடுவது குறைந்து வரும் நிலையில், இன்று காலையில் முற்றிலும் ஒரு தொண்டர் கூட ஓபிஎஸ் இல்லத்தின் முன்பு நிற்கவில்லை என்று சொல்லப்படுகிறது.
மேலும் ஓபிஎஸ் இல்லத்தின் முன்பு ஒரு சில பத்திரிக்கையாளர்கள் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். காலை 11 மணிக்கு பிறகு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், நடராஜன், ரவீந்திரநாத் ஆகிய நான்கு பேரும் வந்தனர். இருப்பினும் அதிமுகவின் தொண்டர்கள் யாரும் வராமல் இருந்தது ஓபிஎஸ்-க்கு ஏமாற்றத்தை தான் கொடுத்து உள்ளது என்று, அந்த பகுதி வட்டாரர்கள் பேசிக் கொள்கிறது.