புதுடெல்லி: ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்காமல், படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என தொழிற்துறை சங்கங்கள் மத்திய அரசை வலியுறுத்தின. ஆனால் இதற்கான தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது.
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடையை சுமூகமாக அமல்படுத்த, இது குறித்த பிரசாரங்களை மாநில அரசுகள் தொடங்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க நிறுவனங்கள், விநியோகிக்கும் நிறுவனங்களை மூடவும், இதுபோன்ற பொருட்களின் விற்பனையை தடுக்கவும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது.
இதன்படி ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தட்டுகள், கப்கள், கரண்டிகள், கத்திகள், பலூன் குச்சிகள், சிகெரெட் பாக்கெட்டுகள், ஸ்வீட் பெட்டிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அழைப்பிதழ்கள், அலங்காரத்துக்கு பயன்படுத்தும் பாலிஸ்டீரின் பொருட்கள், 100 மைக்ரானுக்கும் குறைவான பிவிசி பேனர்கள் போன்றவற்றை இறக்குமதி செய்தல், இருப்பு வைத்தல், விநியோகம் செய்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கு நேற்று முதல் தடை அமலுக்கு வந்துள்ளது.
இந்த தொழில் நாட்டில் ரூ.10,000 கோடி மதிப்பில் நடக்கிறது. இதில் 2 லட்சம் பேர் நேரடியாகவும், 4,50,000 பேர் மறைமுகமாகவும் பணியாற்றுகின்றனர். ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வந்துள்ளதால் உணவு விடுதிகள் மற்றும் அதிகம் விற்பனையாகும் நுகர்பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அவசரம் அவசரமாக மாற்று பொருட்களுக்கு மாறிவருகின்றன. இதனால் ஏற்படும் கூடுதல் செலவால், நுகர்பொருட்களின் விலை அதிகரிக்கும் என நுகர்பொருள் நிறுவனங்கள் கூறுகின்றன.
இது குறித்து மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் கூறுகையில், ‘‘பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தடுக்க நுகர்பொருள் விற்பனை துறையினரிடம் இருந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். இந்த பொருட்களை தயார் செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாற்று பொருள் தயாரிப்புக்கு மாற வேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்துவோம். ஒரு முறை பயன்பாட்டுக்கான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதில் அரசு உறுதியாக உள்ளது’’ என்றார்.