திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றிங்கல் கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் மணிக்குட்டன் (51). இவரது மனைவி சந்தியா (46). இவர்களது மகள் அமேயா (18), அமீஷ் (16).என்ற மகனும் இருந்தனர். சந்தியாவின் சித்தி தேவகியும் (66) இவர்களுடன் வசித்து வந்தார். மணிக்குட்டன் வீட்டுக்கு அருகே ஒரு சிறிய ஓட்டல் நடத்தி வந்தார். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மணிக்குட்டனின் ஓட்டலில் பஞ்சாயத்து சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதாக கூறி ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.இதனால் 2 நாட்களாக இவர் ஓட்டலை திறக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் மணிக்குட்டனின் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் பக்கத்து வீட்டினர் சந்தேகமடைந்து சென்று பார்த்தபோது மணிக்குட்டன் வீட்டுக்குள் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். மற்ற 4 பேரும் படுக்கை அறையில் இறந்த நிலையில் கிடந்தனர்.அவர்களது உடல்களுக்கு அருகே ஒரு விஷ பாட்டிலும் கிடந்தது. இதுகுறித்து கல்லம்பலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லையால் அனைவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து கல்லம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.