BJP Annamalai addresses OPS and EPS as ADMK Co-Ordinator’s: ஒற்றைத் தலைமை விவகாரத்தால், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக அ.தி.மு.க.,வின் ஒரு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக பா.ஜ.க ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ்-ஐ ஒருங்கிணைப்பாளர்கள் என்றே குறிப்பிட்டுள்ளது.
குடியரசு தலைவர் தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக, பா.ஜ.க அறிவித்துள்ள வேட்பாளர் திரவுபதி முர்மு, சென்னையில் இன்று கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோருகிறார்.
இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் முதல்வர்கள் மற்றும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்களான எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு சனிக்கிழமை சென்னையில் சந்திக்க உள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: வழி நெடுக வரவேற்பு பெற்றபடி கரூர் பயணித்த ஸ்டாலின்!
அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை விவகாரத்தால், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதாக இ.பி.எஸ் தரப்பு கூறிவருகின்றனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்கிறது என்று கூறிவருகிறது. அதேநேரம், எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை தவிர்த்து, அ.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் என்று மட்டும் மாற்றம் செய்துள்ளார்.
இந்தநிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க தலைவர்களான எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை ‘ஒருங்கிணைப்பாளர்கள்’ என்றே குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, டெல்லியில் திரவுபதி முர்மு தனது வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ் கலந்துக் கொண்டார். இ.பி.எஸ் அணி சார்பில் அ.தி.மு.க எம்.பி எம்.தம்பிதுரை கலந்துக் கொண்டார். முன்னதாக, அ.தி.மு.க உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாது என்று அண்ணாமலை கூறியிருந்தார்.