அரசு வழங்கும் மானிய டீசலை வழங்கவில்லை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து கோட்டைப்பட்டிணம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் சுமார் 288 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்கின்றனர். தலா ஒரு விசைப்படகுக்கு வருடத்திற்கு 12 ஆயிரம் லிட்டர் மானிய டீசலை அரசு வழங்கி வருகிறது. இதனை மாதம் 1800 லிட்டர் என கணக்கிட்டு ஒவ்வொரு முறையும் கடலுக்குச் செல்லும்போது ஒரு படகுக்கு 250 லிட்டர் டீசல் வழங்குவர்.
மீனவர்கள் மாதம் 12 முறை கடலுக்கு சென்று வருவார்கள். ஆனால் அரசால் மாதம் வழங்கப்படும் 1800 லிட்டர் மானிய டீசலில் 7 முறை மட்டுமே கடலுக்குச் செல்ல முடியும் எனவும், மீதம் 5 முறை கடலுக்குச் செல்ல தனியாரிடம் டீசல் வாங்கிச் செல்வதாகவும் தெரிவித்தனர்.
மீன்பிடித் தடைகாலம் முடிந்து தற்போது மீனவர்கள் கடலுக்குச் சென்று வரும் நிலையில், இன்று காலை கடலுக்கு செல்ல வேண்டுமானால் நேற்று மாலையே டீசல் வழங்க வேண்டும். ஆனால், 288 விசைப் படகுகளுக்கும் 72 ஆயிரம் லிட்டர் டீசல் வழங்க வேண்டும். ஆனால், நேற்றிரவு 12 ஆயிரம் லிட்டர் டீசல் மட்டுமே வந்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மீன்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அதிகாரிகளை கண்டித்து மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM