மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா அதிருப்தி அணி இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்துள்ளன. சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மாநிலத்தின் புதிய முதல்வராக நேற்றுமுன்தினம் பதவியேற்றார்.
தொடர்ந்து கட்சியை கைப்பற்றும் முனைப்பிலும் ஏக்நாத் ஷிண்டே உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்று வழக்கும் தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கால் சிவசேனா கட்சியின் சின்னம் பறிபோகும் என்றும் சொல்லப்படுகிறது.
இதனிடையே, ஏக்நாத் ஷிண்டேவை அனைத்து கட்சிப் பதவிகளில் இருந்தும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அதிரடியாக நீக்கியுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஷிண்டே நீக்கப்பட்டுள்ளதாக சிவசேனா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. ஷிண்டே கட்சி உறுப்பினர் பதவியையும் கைவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு:
பாஜகவும் சிவசேனா அதிருப்தி அணியும் இணைந்து புதிய அரசை அமைத்து, சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் ஜூலை 4-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்புக் கூட்டம் நாளை தொடங்குகிறது. இதில், பேரவையின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். பேரவைத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடக்கிறது. நாளை (3-ம் தேதி) பேரவைத் தலைவர் தேர்வாகிறார். 4-ம் தேதி சட்டப்பேரவையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கு கோருகிறது.
பாஜக, சுயேச்சைகள் மற்றும் சில சிறிய கட்சிகளின் ஆதரவு இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷிண்டே அரசு எளிதாக வெற்றிபெறும் என்றே தெரிகிறது.