3 நாட்களுக்கு முன் ரூ. 109 கோடி செலவில் மிக அழகான முறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது புதிதாக உருவான திருப்பத்தூர் மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலகம்.
7 அடுக்கு மாடிகள் கொண்ட இந்த புதியக் கட்டிடத்தில் நாளை மறுநாள் அம்மாவட்டத்தின் ஆட்சியர் தனது முதல் குறைதீர் கூட்டத்தை இனிதே தொடங்கி, மாவட்ட நிர்வாகத்தை இங்கிருந்து செயல்படுத்த இருக்கிறார்.
இதே போல் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும் ரூ. 118 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டு, நிர்வாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மகிழ்ச்சியான வரவேற்க வேண்டிய விஷயம்..!
இதற்கு சந்தோஷப்படும் அதே தருணத்தில், இதே போல் உருவான நம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் நிலைமையை நினைத்தால் சற்று மனது கனத்துப் போகிறது.
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தின் நிர்வாக பணிகளுக்காக, கள்ளக்குறிச்சி நகரில் இயங்கும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வகுப்பறைகளை ஆட்சியர் அலுவலகத்திற்கு அர்ப்பணித்து விட்டு, இப்பள்ளி மாணவர்கள் மரத்தடியிலும், பள்ளி நிகழ்ச்சி மேடைகளிலும், பள்ளி வரண்டா பகுதிகளிலும் அமர்ந்து பாடம் பயின்று வருகின்றனர்.
5.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அரசுப் பள்ளியில் 50 வகுப்பறைகள் உள்ளன. தற்போது 6 முதல் பிளஸ் 2 வரை ( பிளஸ் 1 நீங்கலாக) 1,905 மாணவர்கள் பயில்கின்றனர்.
இப்பள்ளியின் 16 வகுப்பறைகள் கொண்ட ஒரு கட்டிடத்தை, ஆட்சியர் அலுவல பயன்பாட்டிற்காக மாவட்ட நிர்வாகம் எடுத்துக் கொண்டது. அங்கு கருவூலம், வேளாண்துறை, மக்கள் தொடர்புத் துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
எஞ்சிய 34 வகுப்பறைகளில் 25 வகுப்பறைகளிலேயே மாணவர்கள் அமர்ந்து பயில்கின்றனர்.
மேலும் 9 வகுப்பறைகளில், மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டிய நோட்டுப் புத்தகங்களும், மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய சைக்கிள் உள்ளிட்ட பொருட்களும் மாவட்ட நிர்வாகத்தினரால் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இதனால் வகுப்பறைகள் இன்றி மாணவர்கள் தவித்து வருகின்றனர். குறிப்பாக 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களின் வகுப்பறைகள் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடியிலும், வராண்டாவிலும், பள்ளி நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பயன்படும் மேடைகளிலும் நடைபெறுகின்றன.
ஆட்சியர் அலுவலகத்திற்காக வகுப்பறைகளை கொடுத்துவிட்டு இந்தப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் திக்கித் திணறி வருகின்றனர். “புதிய சேர்க்கை வேறு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிளஸ் 1 சேர்க்கை முடியவில்லை. அந்த மாணவர்களும் வந்தால் அவர்களை எங்கே அமர்த்துவது என்று தெரியவில்லை” என்கின்றனர் இப்பள்ளியின் ஆசிரியர்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்திற்கும் இது தெரியாமல் இல்லை. ஆனாலும், “உரிய மாற்று ஏற்பாடுகளை செய்கிறோம்” என்று தொடர்ந்து கூறி வருகின்றனரே தவிர, மாற்று வழியை ஏற்படுத்தவில்லை.
“மழைக் காலத்திற்கு முன்பு ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர் இங்குள்ள ஆசிரியர்கள்.
இதுபற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் பேசியபோது, “கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் பணி முடிந்து விடும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில், நீதிமன்ற வழக்கால் கட்டிடப் பணி பாதியில் நிற்கிறது.
மாவட்டத்தில் வேறு இடமும் இல்லாத நிலை உள்ளதால், ஆட்சியர் அலுவலகப் பயன்பாட்டிற்கு பள்ளி வகுப்பறைகளை பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இருப்பினும் மாணவர்களின் நலன்கருதி மாற்று ஏற்பாட்டுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்” என்கின்றனர்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமியிடம் இதுபற்றி கேட்டபோது, “நிலைமை அனைவருக்கும் தெரியும். தற்காலிகமாக பள்ளியை ‘ஷிப்டு’ முறையில் இயக்குவது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். விரைவில் மாணவர்கள் பாதுகாப்புடன் பயில நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார்.
எதனால் தாமதம்? கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கான புதிய கட்டிடம், கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரத்தில் 35 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.108 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டு, கடந்த 2020-ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. கோயில் நிலத்தில் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனிநபர் தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், கட்டுமானப் பணிகள் தடைபட்டுள்ளது. கட்டிடப் பணிகள் தொடங்கி 20 விழுக்காடு முடிந்து விட்டன. ‘இப்பிரச்சினையில் சட்டரீதியாக தீர்வு காண அரசு தரப்பில் விரைந்து முயற்சி எடுக்க வேண்டும் அல்லது மாற்று இடத்திற்கு முடிவு செய்ய வேண்டும்’ என்று கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் விரும்புகின்றனர். இதற்கு மத்தியில், தற்போது கட்டி முடிக்கப்பட்டு, திறக்கும் தருவாயில் உள்ள கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு மாவட்ட நிர்வாக அலுவலகங்களை மாற்றலாம். அதை விடுத்து பள்ளிக் கட்டிடத்தை முடக்கி வைத்து, இப்படிச் செய்வது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்புகின்றனர் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் |