திருச்சியில் பாஜக மாநகரச் செயலாளர் உள்ளிட்ட 8 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 11 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் அருகே பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யாவின் கார் மீது, ஒரு தனியார் பேருந்து மோதிய விபத்தில், சூர்யாவின் கார் சேதமடைந்தது.
இதனைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்றை ஜுன் 19 ஆம் தேதி சூர்யா கடத்தி சென்றுவிட்டதாக, அவர் மீது திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கடந்த ஜூன் 23 ஆம் தேதி கைது செய்தனர்.
சூரியாவின் கைது நடவடிக்கையை கண்டித்து, திருச்சி மாநகர பாஜக செயலாளர் ராஜசேகர், ஒண்டிமுத்து , பரமசிவம், கௌதமன், காளி, பார்த்திபன், நவீன், இல.கண்ணன் உள்ளிட்ட பாஜக-வை சேர்ந்த 47 ஆண்களும், 7 பெண்கள் என 62 பேர் கண்டோன்மென்ட் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இது தொடர்பாக கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆய்வாளர் அகிலா கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசாரின் எச்சரிக்கையை மீறி முழக்கம் எழுப்பி ரகளை செய்தது, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்ததையில் திட்டி மிரட்டியது, போக்குவரத்துக்கு இடையூறாக சாலை மறியல் செய்தது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக பாஜக-வினர் 62 பேர் மீதும் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில், பாஜக-வினர் மீது 294, 506, 147, 143, 153, 282, 353, 71, உள்ளிட்ட பிணையில் வெளிவரமுடியாத குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM