மதுரை: காவல்துறை அரசாங்கத்தின் அங்கம், அது சட்டத்தின் பார்வையில் இருக்கிறது. காவல்துறையினர் சட்டத்திற்கும், மனசாட்சிக்கும், கோட்பாடுகளுக்கும் உட்பட்டு செயல்பட வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கல்லூரியில், காவல்நிலையங்களில் எதிர்பாரத விதமாக நடக்கும் மரணங்களை முன்கூட்டியே தடுப்பது குறித்து, தென்மாவட்ட அளவிலான சிறப்பு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டவர்களை, மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் வரவேற்றார்.
தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கருத்தரங்கை தொடங்கி வைத்து காவல்நிலைய மரணங்களை தடுப்பது குறித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “தமிழகத்தில் இனிமேல் காவல்நிலைய கட்டுப்பாட்டில் இருக்கும் போது ஒருவர்கூட உயிரிழக்கக் கூடாது, காவல் நிலையங்களில் மரணங்கள் நிகழக்கூடாது என தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதனை ஏற்று காவல்துறையினர் செயல்படவேண்டும். அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஒருவரை, குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்ல வேண்டும்.
கடந்த 1902-ம் ஆண்டிலேயே காவல்துறையினர் துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளன. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் அதிகமாக 2018-ல் 18 மரணங்களும், 2021-ல் 4 பேர், 2022-ல் 2 பேர் காவல் நிலையங்களில் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்ததில், காவல்துறையினரின் பிழையால் 12 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சி.பி.சி.ஐ.டி விசாரணையில் தெரியவந்துள்ளன. மற்ற 68 வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் உடல் உபாதைகள், நோய்கள் காரணமாகவும், தற்கொலையாலும் உயிரிழந்துள்ளனர்.
நோய் காரணமாக உயிரிழந்தாலும் போலீஸார் மீதே குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாக 48 காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறை அரசாங்கத்தின் அங்கம், சட்டத்தின் பார்வையில் இருக்கிறது. சட்டத்திற்கும், மனசாட்சிக்கும், கோட்பாடுகளுக்கும் உட்பட்டு காவல்துறையினர் செயல்பட வேண்டும்” என்றார்.
இக்கருத்தரங்கில், தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் விருதுநகர் எஸ்பி மனோகரன், மதுரை பிசிஆர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ஆர்.ரவி, குரலற்றவர்களின் குரல் என்ற அமைப்பின் செயலர் நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசி டிஜிபி, “தமிழகம் முழுவதும் கஞ்சா தடுப்பு நடவடிக்கையாக 18 ஆயிரம் பேர் மீது வழக்குகள் பதியப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுளளனர். மீண்டும் அவர்கள் செயல்படாமல் இருக்க 2,300 பேரின் வங்கிக் கணக்குகள், சொத்துக்களை முடக்கியுள்ளோம். மதுரையில் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் இதில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்திற்கு வெளிமாநிலங்களிலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்துவதை தடுக்கும் வகையில் சென்னையில் 2 மோப்ப நாய், கோயம்புத்தூரில் 1 , சேலத்தில் 1 என 4 மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.
இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இங்குள்ள 99 சதவீதம் பேர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். 1 சதவீதம் பேர் மற்ற போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். மேலும், பொதுமக்கள் ‘லோன் அப்’ மூலம் ஏமாற்றப்படுகின்றனர். பணம் இரட்டிப்பு தருவதாக சில நிறுவனங்கள் அறிவித்து பண மோசடி செய்து வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் வங்கி வட்டியைத் தவிர ஏமாற்றும் நிறுவனங்களின் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழக்கக்கூடாது. ஒரு லட்சத்திற்கு மாதம் ரூ.10 ஆயிரம் வட்டி தருவதாக நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றனர். கந்துவட்டி தொடர்பாக வரும் புகார்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்று சைலேந்திர பாபு தெரிவித்தார்.