சென்னை/புதுச்சேரி: குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் திரவுபதி முர்மு நேற்று தமிழகம், புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, ஆதரவு திரட்டினார்.
தனி விமானத்தில் நேற்று சென்னை வந்த திரவுபதி முர்மு, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் எம்.பி., எம்எல்ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
முதல் அமர்வில், மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், முரளிதரன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், புதிய பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இரண்டாவது அமர்வில், பாமக தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு மற்றும் பாமக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
மூன்றாவது அமர்வில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 4-வது அமர்வில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தேவநாதன் யாதவ், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் திரவுபதி முர்மு பேசும்போது, “புனிதமான தமிழகத்துக்கு வந்திருப்பதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன். விடுதலைப் போராட்டத்தில் வேலூர் கலகத்தின் பங்கு முக்கியமானது. நேதாஜியின் படையில், தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் இருந்தனர். சிறந்த மாநிலமான தமிழகம் விவசாயத்தைச் சார்ந்து இருக்கிறது. தமிழக மக்களை எண்ணி நான் பூரிப்படைகிறேன். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த நான், சமூக நீதியை நிலைநிறுத்தும் வகையில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறேன்” என்றார்.
முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசும்போது, “2012-ல் குடியரசுத் தலைவர் தேர்தலில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சங்மாவை அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன. ஆனால், காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளின் சூழ்ச்சியால், அவரால் வெற்றி பெறமுடியவில்லை. தற்போது திரவுபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்ததை முழு மனதுடன் ஆதரிக்கிறோம்” என்றார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், திரவுபதி முர்முவை வரவேற்கிறேன். உங்கள் வெற்றிக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கிறது” என்றார்.
பாமக தலைவர் அன்புமணி பேசும் போது, “திரவுபதி முர்முவை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் என்று பார்க்காமல், திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசும்போது, “திரவுபதி முர்முவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. அவருக்கு எனது வாழ்த்துகள்” என்றார்.
புதுச்சேரியில்…
முன்னதாக, நேற்று காலை புதுச்சேரிக்குச் சென்ற திரவுபதி முர்மு, தனியார் ஓட்டலில் நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்றார். என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பாஜக அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, புதுவை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், துணைத் தலைவர் ராஜவேலு மற்றும் எம்எல்ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்று, ஆதரவு தெரிவித்தனர்.
காத்திருந்த ஓபிஎஸ்…
நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓபிஎஸ் ஓட்டலில் உள்ள தனி அறையில் அமர்ந்திருந்தார். முதல் அமர்வில் பழனிசாமியும், 3-வது அமர்வில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றனர். இருவரும் ஒரே மேடையில் அமர்வதை தவிர்த்தனர். இரண்டாவது அமர்வில் பாமக தலைவர் அன்புமணி பங்கேற்றதால், ஓ.பன்னீர்செல்வம் காத்திருந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றார்.