சென்னை: கூட்டுறவு அங்காடியில் ‘கருப்புக்கவுனி அரிசி’ விற்பனை அதிகரிக்க வேண்டும் என்று கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.
சென்னை ஆழவார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் வளாகத்தில் உள்ள கூட்டுறவு அங்காடியில் கூட்டுறவு, உணவு (மற்றும்) நுகர்வோர் பாதுகாப்புத் துறை, முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு வைக்கப்பட்டுள்ள பருப்பு வகைகள் மற்றும் சிறுதானியங்கள், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் வகைகள், மஞ்சள், மிளகாய் உள்ளிட்ட சமையல் மாசாலா வகைகள் ஆகியவை தரமாக இருக்கின்றனவா என்பதையும் ஆய்வு செய்தார்.
மேலும், திருமயம் கூட்டுறவு விற்பனைச் சங்கத்துடன் இணைந்து கூட்டுக் கொள்முதல் அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்ட சத்தான கருப்புக்கவுனி அரிசி மற்றும் திருச்செங்கோடு கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தயாரிப்பான அர்த்தநாரிஸ்வரா என்ற அரிசி வகைகளையும், இதர நிறுவனங்களின் தயாரிப்புகளையும் நேரில் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து தரமான கூட்டுறவு சங்கங்களின் தரமான தயாரிப்புகளை வெளிச்சந்தைகளை விட, குறைந்த விலையில் விற்கவும், இத்தயாரிப்புக்களை பொதுமக்களிடம் உரிய வகையில் கொண்டு சேர்க்க தேவையான அனைத்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், விற்பனையை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.