ஹைதராபாத்: ”சந்திரசேகர் ராவ் ஒரு சர்வாதிகாரி” என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.
பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு கலந்து கொள்ளுவதற்காக பிரதமர் மோடி வந்தார். ஆனால் அவரை முதல்வர் என்ற முறையில் வரவேற்க சந்திரசேகர் ராவ் செல்லவில்லை. இதோடு மூன்றாவது முறையாக பிரதமர் ஹைதராபாத் வந்துள்ளார். ஆனால், இந்த மூன்று முறையும் பிரதமரை வரவேற்க சந்திரசேகர் ராவ் விமான நிலையம் செல்லவில்லை.
சந்திரசேகர் ராவ்வின் இந்தச் செயலை பாஜக எம்பிக்கள், அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். தெலங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சி மற்றும் பாஜக இடையே கடந்த சில வருடங்களாக அரசியல் ரீதியாக மோதல் இருந்து வருகிறது. ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றிய பிறகு இந்த மோதல் வலுவடைந்தது. இதன்தொடர்ச்சியாகவே, பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்வுகளை முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்து வருகின்றார். இன்றும், பிரதமர் மோடியை அவர் புறக்கணித்தது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இந்த விவகாரத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவ்வை ”சர்வாதிகாரி” என்று விமர்சித்தார். மேலும் அவர் பேசுகையில், “அரசியலமைப்பின் கண்ணியத்தை புண்படுத்துபவர்கள் சர்வாதிகாரிகளே. இன்று, சந்திரசேகர் ராவ்வும் ஒரு சர்வாதிகாரி. அரசியலமைப்புச் சட்டத்தை மட்டுமின்றி கலாச்சார மரபுகளையும் மீறி அவர் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
சந்திரசேகர் ராவ் குடும்பத்திற்கு அரசியல் என்பது சர்க்கஸ் போல் இருக்கலாம். ஆனால், எங்களுக்கு அது தேசிய கொள்கையின் ஊடகம். தெலங்கானா இன்று வாரிசு அரசியலை செய்கிறது. ஒருபோதும் வாரிசு அரசியலை இந்தியா பின்பற்றாது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.