பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக இன்று சென்னை வந்துள்ளார்.
தனியார் ஓட்டல் ஒன்றில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்பிகள், எம்எல்ஏக்களை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டியுள்ளார்.
இந்த சிறப்பு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருமே கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி முதலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவுகளை தெரிவித்து வாழ்த்துரையாற்றினார்.
பின்னர் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் மேடை ஏறி தங்களது தனது ஆதரவை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர்செல்வம், “அதிமுகவின் சட்ட விதிமுறைகளின் படி, தற்போது வரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, பாமக சார்பாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ், எம்எல்ஏ.,க்கள் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர் பேசிய பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், “திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளோம். திரௌபதி முர்மு நிச்சயம் வெற்றிபெற வேண்டும்.
பழங்குடியினத்தை சேர்ந்த திரௌபதி முர்மு வெற்றிபெற வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும், திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும். சமூக நீதி குறித்து பேசுபவர்கள் திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.