சிவகங்கை ஆட்சியரின் பெயரில் போலி வாட்ஸ்அப் கணக்கு – நேர்முக உதவியாளரிடம் ரூ. 3 லட்சம் மோசடி

சமீப காலங்களாகவே அரசு உயர் அதிகாரிகள் மற்றும் உயர் பொறுப்பில் உள்ள நபர்களின் படங்களை வாட்ஸ்அப்பில் வைத்து அவர்களோடு பணிபுரியும் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் பணம் பறிப்பதில் ஒரு கும்பல் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் பணிபுரியும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களைக் குறிவைத்து, அவர்கள் பெயரில் போலி கணக்குத் துவங்கி, அலுவலகம் தொடர்புடைய அதிகாரிகளுக்கு வாட்ஸ்அப்பில் மேசேஜ் அனுப்பி பணப் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த அலுவலர் சுதாரித்து, சம்மந்தப்பட்டவரிடம் தெரிவிக்கும் வரையிலும் கிடைக்கும் பணத்தை வாரிச் சுருட்டிக் கொள்கின்றனர்.

நேர்முக உதவியாளர்

அந்தவகையில், தான் தற்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியின் பெயரில் போலிக் கணக்கு துவங்கிய மர்ம நபர்கள், ஆட்சியரின் விவசாயத்துறை நேரடி உதவியாளர் சர்மிளா தேவியை வாட்ஸ்அப் மெசேஜ் மூலம் தொடர்புகொண்டு, அமேசானில் இருந்து கிப்ட் கார்டு வந்திருக்கிறது. அதனை குறிப்பிட்ட பணம் செலுத்தி வாங்கி அனுப்புமாறு கூறி, அதற்கான லிங்கையும் அனுப்பி வைத்திருக்கின்றனர். ஆட்சியர் தான் கேட்கிறார் என்று நினைத்த சர்மிளா, அந்த லிங்கிற்குள் உள்ளே சென்ற போது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.10,000 டெபிட் ஆகியிருக்கிறது.

இதே போன்று அடுத்தடுத்த மெசேஜ்கள் இவருக்கு வந்திருக்கிறது. மொத்தமாக 30 முறை, ரூ.3லட்சம் வரையிலும் சர்மிளாவின் வங்கிக் கணக்கில் இருந்து சென்றிருக்கிறது. இதையடுத்து, சந்தேகம் அடைந்து, அலுவலகத்தில் உள்ள சக பணியாளர்களிடம் சிலரிடம் கேட்டபோது, அவர்களுக்கும் இது போன்ற மேசேஜ்கள் வந்ததாகவும், இது உண்மை இல்லை, போலியாக கணக்கு துவங்கி நம்மை ஏமாற்ற முயற்சிக்கின்றனர் என்று கூறியுள்ளனர். இதையடுத்து, சிவகங்கை சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீஸார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் அந்த போலி வாட்ஸ்அப் கணக்கு பிகார் மாநிலத்தில் இருந்து செயல்படுவது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து, இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸாரிடம் கேட்டபோது,
“பிகார், மகராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் என வெளி மாநிலங்களைச் சேர்ந்த கும்பல், உயர் அதிகாரிகளை குறிவைத்து, அவர்கள் போல பேசினால், நிச்சயம் பணம் கிடைக்கும் என்ற கோணத்தில் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கடந்த சில் தினங்களில் புதுக்கோட்டை, தூத்துக்குடி, விழுப்புரம், திருப்பூர் என பல்வேறு மாவட்ட ஆட்சியர்களின் பெயரில் போலி கணக்கு ஆரம்பித்து மோசடியை அரங்கேற்றி வருகின்றனர்.

குறிப்பாக, அரசு அலுவலக ஊழியர்களையே குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது. பொதுமக்கள் குறிப்பாக, அலுவலர்கள் தங்களுக்குத் தெரிந்த அதிகாரியின் புகைப்படுத்துடன் தெரியாத மொபைல் எண்ணில் இருந்து வரும் வாட்ஸ் அப் மெசேஜ்களையோ, பேஸ்புக் மெசேஞ்சர் மெசேஜ்களையோ, மெயில்களையோ நம்பி பணமோ, கிப்ட் கார்டோ அனுப்ப வேண்டாம். தொடர்ந்து, அந்த நெட்வொர்க்கை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.