இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரிஷப் பண்ட அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார்.
ரவிந்திர ஜடேஜாவும் அரைசதம் அடிக்க, இந்திய அணி அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது.
கொரோனா காரணமாக மான்செஸ்டரில் நடக்கவிருந்து ஒத்திவைக்கப்பட்ட 5-வது டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்காமில் துவங்கியது. இந்திய அணி புதிய கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா களமிறங்கினார். கபில்தேவுக்கு அடுத்து, 35 ஆண்டுக்குப் பின் கேப்டன் ஆன இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனார் பும்ரா.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்திய அணியில் புஜாரா, சுப்மன் கில் ஜோடி துவக்கம் தந்தது. சுப்மன் 17 ஓட்டங்கள் எடுத்து, ஆண்டர்சன் பந்தில் அவுட்டானார். அடுத்து புஜாராவுடன் இணைந்தார் ஹனுமா விஹாரி. இருவரும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்த, அணியின் எண்ணிக்கை மட்டமாக இருந்தது. முதல் 6 ஓவரில் 26 ஓட்டங்கள் எடுத்த இந்தியா, அடுத்த 11 ஓவரில் 19 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது. இந்த நெருக்கடியில், ஆண்டர்சன் பந்தில் புஜாரா (13) அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.
அடுத்து வந்த கோஹ்லி, பாட்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்திய அணி 53/2 ஓட்டங்கள் எடுத்த போது, மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. 2 மணி நேர தாமதத்துக்குப் பின் மீண்டும் போட்டி துவங்கியது. விஹாரி 20 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்த சில நிமிடத்தில் கோஹ்லி 11 ஓட்டங்களுடன் போல்டானார். ஸ்ரேயாசும் (15) கைவிட, இந்திய அணி 98/5 ஓட்டங்கள் என திணறியது.
பின் ரிஷப் பண்ட, ஜடேஜா இணைந்து அணியை மீட்டனர். ஜாக் லீச் வீசிய 37வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்சர் என 14 ஓட்டங்கள் விளாசினார் ரிஷப். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷாப், 89-வது பந்தில், சதம் கடந்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக இவர் அடித்த 3வது சதம் இது. இவருக்கு சூப்பரான ‘கம்பெனி’ கொடுத்த ஜடேஜா, அரைசதம் எட்டினார்.
6-வது விக்கெட்டுக்கு 222 ஓட்டங்கள் எடுத்த போது, ரூட் சுழலில் சிக்கினார் ரிஷாப் (146 ஓட்டங்கள், 111 பந்துகள்). ஷர்துல் (1) நீடிக்கவில்லை.
முதல் நாள் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட்டுக்கு 338 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஷமி (0), ஜடேஜா (83) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3, பாட்ஸ் 2 விக்கெட் எடுத்தனர்.